Published : 06 Oct 2020 09:12 PM
Last Updated : 06 Oct 2020 09:12 PM

9 தேசிய விருதுகள், சொந்தமாக நிறுவனம், 4 செயலிகள் உருவாக்கம்: 15 வயதுச் சிறுவனின் இமாலயச் சாதனை!

கிருத்திக் விஜயகுமார்.

15 வயதில் ரோபோடிக்ஸ் துறையில் தேசிய அளவில் 9 விருதுகள், மாநில அளவில் 7 விருதுகள், சொந்தமாக ரோபோடிக்ஸ் பயிற்சி நிறுவனம், கூகுள் பிளே ஸ்டோரில் 4 தொழில்நுட்பச் செயலிகள் உருவாக்கம், பயிற்சிப் பட்டறை, கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ் பயிற்சி அளித்தல் என இளம் வயதிலேயே தனது அசாத்தியத் திறமையால் ஆச்சரியப்படுத்துகிறார் சிறுவன் கிருத்திக் விஜயகுமார்.

சென்னை, பெரம்பூரைச் சேர்ந்த கிருத்திக் சிறு வயதில் இருந்தே மின்சாரம், கணினி, ரோபோடிக்ஸ் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். இதை உணர்ந்த கிருத்திக்கின் பெற்றோர், அவரின் அறிவுப் பசிக்கும் தீனி போட்டனர். ரோபோடிக்ஸ் தொடர்பான பயிற்சிகளை முழுமையாகக் கற்ற கிருத்திக், தற்போது தன்னைவிடப் பெரிய வயது மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

கிருத்திக்கின் சாதனைப் பயணம் குறித்து அவரின் தாய் கோகிலா கூறும்போது, ''கிருத்திக்குக்கு 3 மாதங்கள் ஆனபோது, கணவர் வெளிநாடு சென்றுவிட்டார். அவருடன் கணினி மூலம் வெப் கேமராவில்தான் தினந்தோறும் பேசுவோம். அதனால் 1 வயதிலேயே கணினியை ஆன், ஆஃப் செய்யக் கற்றுக்கொண்டு விட்டான். கணிப்பொறியிலேயே அவரைப் பார்த்துப் பார்த்துக் கம்ப்யூட்டரை அப்பா என்றுதான் அழைப்பான்.

பிராமிஸிங் இந்தியன் விருது விழாவில்...

2 வயதாகும்போது நிறைய சேட்டைகள் செய்வான். சுண்டுவிரலை ஸ்விட்ச் பிளக்கில் நுழைத்துப் பார்ப்பான். பதறிப்போய்க் கேட்டால், ஷாக் எப்படி அடிக்கும் என்று கேட்பான். கார் பொம்மைகள் வாங்கிவந்து தந்தால், அதை ஓட்டுவதில் அவனுக்கு ஆர்வம் இருக்காது. புதிதாக, எவ்வளவு விலை உயர்ந்த பொருளாக இருந்தாலும் அதை முழுமையாகப் பிரித்து, மீண்டும் இணைத்து இயக்குவான். வேறுவேறு விளையாட்டுப் பொருட்களை ஒன்றுசேர்த்து, புதிதாக ஒரு பொருளை உருவாக்குவான். தொலைக்காட்சியில் என்ன ஒளிபரப்பாகிறது என்று பார்க்கமாட்டான். எப்படி இயங்குகிறது என்றுதான் பார்ப்பான்.

ப்ரீ கேஜி வகுப்பில் சேர்ந்த முதல் நாளே தொலைந்துவிட்டான். பள்ளியில் இருந்து பதறிப்போய் என்னை அழைத்தனர். கிருத்திக்கின் சுபாவத்தை அறிந்து அருகில் மோட்டார் அறை ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். அவர்கள் காண்பித்த இடத்துக்குப் போய்ப் பார்த்தால், உட்கார்ந்து ஸ்க்ரூ ட்ரைவரை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது ஆர்வத்தை அறிந்து 3-ம் வகுப்புப் படிக்கும்போது அருகில் இருந்த எலக்ட்ரானிக்ஸ் பயிற்சி மையத்தில் சேர்த்துவிட்டோம். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும் வகுப்புகளில் ஆர்வத்துடன் கலந்துகொள்வான். மின்சாரம் குறித்தும் அடிப்படை மின்னியல் குறித்தும் கற்றுக் கொண்டான். 4-ம் வகுப்புப் படிக்கும்போது ஆன்லைனிலேயே ரோபோடிக்ஸ் வகுப்புகளைக் கற்றுக் கொண்டான். தலா 3 முதல் 6 மாதங்கள் கற்க வேண்டிய Beginner, Foundation, Advanced ரோபோடிக்ஸ் வகுப்புகள், IOT, Virtual Reality வகுப்புகளை 1 மாதத்திலேயே கற்றுக்கொண்டான்.

ஐஐடி சென்னையில்...

ரோபோடிக்ஸ் அதிக செலவு பிடிக்கும் படிப்பு என்பதால், அதைச் சமாளிக்க வீட்டிலேயே ட்யூஷன் எடுக்க ஆரம்பித்தேன். போட்டிகளுக்கு அழைத்துச் செல்ல அதிகப் பணம் தேவைப்பட்டது. 6-ம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த கிருத்திக், நிலைமையை உணர்ந்து யூடியூப் பார்த்துக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தான். 7-ம் வகுப்பில் அருகிலுள்ள ரோபோடிக்ஸ் மையத்தில், வார இறுதி நாட்களில் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தான்.

அங்கு 12-ம் வகுப்பு மாணவர்கள் தொடங்கி கல்லூரி மாணவர்கள்கூடச் சந்தேகம் கேட்பார்கள். அந்த அனுபவம் தந்த தன்னம்பிக்கையில், 8-ம் வகுப்புப் படிக்கும்போது Futura Robotics என்ற நிறுவனத்தைத் தொடங்கி, எம்எஸ்எம்இ-ல் பதிவு செய்தோம். கோடை காலத்தில் சம்மர் கேம்ப் ஆரம்பித்தோம். 5-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு அடிப்படை மின்னணுவியல் தொடங்கி, ரோபோடிக்ஸ் வரை எல்லாமே கற்றுக்கொடுத்தான். கிருத்திக்கின் திறமையைப் பார்த்து, 10-ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்ந்து படித்தனர்'' என்கிறார் கோகிலா.

செயற்கை நுண்ணறிவு குறித்தும் கற்க ஆசைப்பட்டார் கிருத்திக். அதைக் கற்க ஆகும் தொகை மிக அதிகமாக இருந்தது. அந்தநேரத்தில் இண்டெல் நடத்திய குவிஸ் போட்டியில் வெற்றி பெற்றதால், 4 மாதங்களுக்கு இலவச செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி கிடைத்தது. அதையும் வெற்றிகரமாக முடித்தார். இளம் வயதிலேயே நிறைய விருதுகள், அங்கீகாரங்களைப் பெற்றதால் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை 100 சதவீதக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் பள்ளி நிர்வாகம் அறிவித்தது.

அறிவியலிலும் தன் மகனுக்கு ஆர்வம் இருப்பதை உணர்ந்த தாய் கோகிலா, கிருத்திக் குறித்த விவரங்களை இஸ்ரோ தலைவர் சிவனுக்கு மெயில் அனுப்பினார். அதைப் படித்த சிவன், அவரின் உதவியாளர் மூலம் நேரில் அழைத்து வரச் செய்தார். 2 நாட்கள் இஸ்ரோவில் தங்கி, வானியலையும் கற்று வந்துள்ளார் கிருத்திக்.

மயில்சாமி அண்ணாதுரையுடன்...

சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையைச் சந்திக்கும் வாய்ப்பும் கிருத்திக்குக் கிடைத்துள்ளது. நிறையக் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதுடன் காப்புரிமை பெற வேண்டும் என்று அவர் கூறியதை அடுத்து, மலிவான விலை, குறைந்த எடையில் காதுகேட்கும் இயந்திரத்தை வடிவமைத்துக் காப்புரிமைக்காகக் காத்திருக்கிறார் கிருத்திக்.

500 ரூபாயில் வீட்டிலேயே ஏர்கூலர் தயாரிப்பு, குறைந்த விலையில் காதுகேட்கும் இயந்திரம், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் கருவி உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை வடிவமைத்துள்ளார். குப்பை மேலாண்மைத் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்காக ஸ்மார்ட் வீடுகள், ஸ்மார்ட் போன் ப்ராஜெக்டர், குறைந்த விலையில் ஏசி, வளிமண்டலம், கார்பன் மோனாக்ஸைடு அறிவிப்பான், ராணுவ வீரர்களின் இதயத் துடிப்பைக் கண்காணிக்கும் கருவி, குரல் மூலம் ரோபோவை இயக்குதல், கற்பித்தலுக்கு உதவும் ரோபோ என கிருத்திக்கின் செயல்திட்டங்கள் நீண்டுகொண்டே செல்கின்றன.

அதேபோல தொழில்நுட்பத்தின் அடிப்படை பற்றியும் புதிய வரவுகள் குறித்தும் எளிமையாக விளக்கி, அதைத் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.

குப்பை மேலாண்மை இயந்திரம்

தன்னுடைய பயணம் குறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் பேசும் கிருத்திக், ''ரோபோடிக்ஸ் துறையில் தேசிய அளவில் 9 விருதுகள், மாநில அளவில் 7 விருதுகள் பெற்றுள்ளேன். இதில் Makers Hall of Fame 2019, Promising Indian Award 2019, இரண்டு முறை World Scholars Cup விருது, Raaif India விருது இருமுறை, Design Championship Award 2017, IIT Madras Shaastra Smart City Challenge 2018, IIT Madras Power to Idea Business plan Competition 2018 உள்ளிட்ட விருதுகள் அடங்கும்.

இந்தத் தருணத்தை மிகவும் பெருமிதமாக உணர்கிறேன். பெற்றோரின் ஆதரவு இல்லாமல் என்னால் எதையும் சாதித்திருக்க முடியாது. அவர்களுடைய தேவைகளைக் குறைத்துவிட்டு எனக்காகச் செலவு செய்வார்கள்.

இனியாவது எனக்கான ஆராய்ச்சி, படிப்புத் தேவைகளுக்கு நானே சம்பாதித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஏராளமான பயிற்சி மையங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ரோபோடிக்ஸ் பயிற்சி அளித்து வந்தேன். கரோனா காரணமாகத் தற்போது செயலிகள் உருவாக்கம், வெபினார், எத்திக்கல் ஹேக்கிங் தொடர்பான ஆன்லைன் வகுப்புகளுடன் 10-ம் வகுப்புப் பாடங்களையும் படித்து வருகிறேன்.

கிருத்திக் உருவாக்கிய ரோபோ

என்னுடைய Futura Robotics நிறுவனம் மூலம் வயதுக் கட்டுப்பாடு இல்லாமல் மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சிகளை அளிக்க விரும்புகிறேன். அதேபோல கூகுள் ப்ளே ஸ்டோருக்காக Futura Robotics, Mix Chat, Green, QR Reader ஆகிய செயலிகளையும் உருவாக்கி அவற்றை மேம்படுத்தி வருகிறேன்.

வருங்காலத்தில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும் என்பதைவிட, ஏற்கெனவே இருக்கும் தொழில்நுட்ப உபகரணங்களைக் குறைந்த விலையில் வடிவமைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்'' என்றார் கிருத்திக்.

-க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x