

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அரசு மருத்துவமனையில் குடிநீர் வசதி, காவலாளி இல்லாததால் உள்நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு தினமும் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். 50-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. நோயாளிகள் வசதிக்காக வைக்கப்பட்டிருந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஓராண்டிற்கு மேலாக செயல்படவில்லை.
மேலும் மகேப்பேறு, குழந்தைகள் நலம், எலும்பு முறிவு, பல் போன்ற பிரிவுகளுக்கு மருத்துவர்கள் இல்லை. மேலும் அதே வளாகத்தில் உள்ள சித்தா பிரிவிலும் மருத்துவர், மருந்தாளுநர் பணியிடமும் காலியாக உள்ளது. போதிய தூய்மை பணியாளர்கள் இல்லாததால் மருத்துவமனை வளாகம் அடிக்கடி சுத்தம் செய்வதில்லை.
மேலும் காவலாளி இல்லாததால் இரவு நேரங்களில் கால்நடைகள் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைகின்றன. இதனால் உள்நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு நகரத் தலைவர் அம்பலம் ராவுத்தர் நெயினார் கூறுகையில், ‘‘ மருத்துவர்கள் பற்றாக்குறையால் சிகிச்சை பெற நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எலும்பு முறிவு போன்ற சிகிச்சைகளுக்கு சிவகங்கை செல்ல வேண்டியுள்ளது.
இளையான்குடி பகுதி மாவட்டத்தின் கடைகோடி பகுதியில் அமைந்துள்ளதால் 55 ஊராட்சிகளைச் சேர்ந்தவர்கள் இளையான்குடி அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறுகின்றனர்.
இதனால் உடனடியாக ஆட்சியர் தலையிட்டு அரசு மருத்துவமனைக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்று கூறினார்.