

வடகிழக்கு பருவமழையால் வெள்ளம் வந்தால் மதுரையில் 27 இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படலாம் என்று கருதி அப்பகுதிகளில் மழைநீர் கால்வாய்களை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அதனால், மதுரை மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடுக்கான பணிகள் குறித்து இன்று ஆய்வு நடத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பி.சந்திரமோகன், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகள், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளம் வந்தால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை பார்வையிட்டனர்.
அதன்பின் கண்காணிப்பு அலுவர் பி.சந்திரமோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மழை வெள்ளம் ஏற்பட்டால் பாதிக்கக்கூடிய 27 இடங்கள் கண்டறியப்பட்டு அதில் ஒவ்வொரு பகுதிக்கும் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த 27 இடங்களிலும் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றில் 25 பகுதிகள் மதுரை மாநகராட்சியின் எல்லைக்குள் வருகிறது.
கடந்த காலங்களில் பெரும்பாலும் வைகை ஆற்று இரு கரைகளிலும்தான் பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது வைகை ஆற்றின் இருகரைகளிலும் தடுப்புச்சுவர் கட்டும் பணி பெரும்பாலும் முடிக்கப்பட்டுள்ளது.
எனவே வைகை ஆற்றின் கரைகளில் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். இது தவிர மாநகராட்சி பகுதிகளில் உள்ள 13 வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் வாய்க்கால்கள், மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள், சிறுபாலங்கள் ஆகியவற்றில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தை பொறுத்தமட்டில் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பாதிப்புக்களை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகமும் மற்றும் மாநகராட்சி நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளனர்.
மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய நோய் தொற்றினை தடுப்பதற்கும் முன்னேற்பாட்டுப் பணிகளாக பொதுசுகாதாரம், மருத்துவர்களுடன் ஆலோசனையும் மேற்கொள்ளப்பட உள்ளது.
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் நீண்ட கால பணிகள் எனவே அப்பணிகளை மிக விரைவில் முடிப்பதற்கும், பருவகால மழைகள் தொடங்கும் முன் ஏற்கெனவே தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் உடனடியாக பணிகள் மேற்கொள்ளப் பட்டு முடிப்பதற்கும், மழைகாலம் முடியும்வரை இனிமேல் பள்ளங்கள் தோண்டப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், நகரப்பொறியாளர் அரசு, உதவி ஆணையாளர்கள் சேகர், பிரேம்குமார், ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.