

கேமன் நிறுவன விவகாரம் தொடர்பான வழக்கில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிதாக டெண்டர் கோரி சுரங்கப் பாதை அமைக்கும் பணியை மேற்கொள்ள தடை எதுவும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வழியாக சைதாப்பேட்டை வரை மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கேமன் இந்தியா நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துகொண்டது. குறிப்பிட்ட காலத்துக்குள் பணியை முடிக்காததால், பணியை நிறுத்தும்படி கேமன் நிறுவனத்துக்கு கடந்த மே மாதம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கேமன் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், “நிலம் கையகப்படுத்துதல், போக்குவரத்து மாற்றம் போன்றவற்றில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே சுரங்கப் பாதைப் பணியை முடிக்க தாமதம் ஏற்பட்டது. எனவே, எங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கூடாது. நாங்கள் செலுத்தியுள்ள வங்கி உத்தரவாதத் தொகையை எடுத்துக் கொள்ளக்கூடாதென சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “இருதரப்பினரும் சமசர மையம் மூலம் பிரச்சினையை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டார். ஆனால், இதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்புக் கொள்ளவில்லை.
இந்த நிலையில், இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேமன் நிறுவனத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ததற்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. எனவே, புதிய ஒப்பந்தப் புள்ளியைக் கோருதல் உள்ளிட்ட பணிகளை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளலாம்.
கேமன் நிறுவனம் அளித்துள்ள வங்கி உத்தரவாதத் தொகையைப் பொருத்தவரை இருதரப்பினரும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். வங்கி உத்தரவாதத் தொகைக்கான தேதி முடியும் 15 நாட்களுக்கு முன்னதாக அதனை நீட்டிக்க வேண்டும். இந்த நிபந்தனையை கேமன் நிறுவனம் மீறினால், மெட்ரோ ரயில் நிர்வாகம் அந்த தொகையை எடுத்துக் கொள்ளலாம். கேமன் நிறுவனத்தின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சமரசப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கையை இருதரப்பினரும் நான்கு வாரத்துக்குள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு நீதிபதி ரவிச்சந்திரபாபு உத்தரவிட்டார்.