

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே 125 ஏக்கரில் நெல் விதைப்பு செய்து முளைக்காததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காளையார்கோவில் பகுதியில் வானம் பார்த்த பூமியாக இருப்பதால் நெல் விதைப்பு செய்யப்படுகிறது.
இலந்தகரை, கிராம்புலி, கோடிக்கரை, சிங்கினி, தளிர்தலை, கூத்தனி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பாண்டிமாரந்தை, தோன்டியூர், குடியாண்டவயல் பகுதிகளில் உள்ள கண்மாய் மூலம் 125 ஏக்கரில் நெல் சாகுபடி செய்கின்றனர்.
மேலும் அவர்கள் முந்தைய ஆண்டு விளைந்த நெல் விதையை, அப்படியே அடுத்த ஆண்டு பயன்படுத்துகின்றனர். இந்தாண்டு கடந்த மாதம் பெய்த பருவமழையை நம்பி ஆடுதுறை, ஜோதி ரக நெல் விதையை விதைப்பு செய்தனர்.
விதைப்பு செய்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் ஒரு விதை கூட முளைக்கவில்லை. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கோடிக்கரையைச் சேர்ந்த காட்டுராஜா கூறுகையில், "விதைப்பில் ஒரு விதை கூட முளைக்காதது அதிர்ச்சியாக உள்ளது. கடந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறையால் விலைக்கு தண்ணீரை வாங்கி பயன்படுத்தினோம்.
மேலும் விதைப்பு செய்த சமயத்தில் மழை பெய்தது. இதனால் விதைகள் முளைக்காமல் போனதா? (அ) விதையில் பிரச்சினையா? என தெரியவில்லை. இதனால் வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்று கூறினார்.
இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ நெல் முளைக்காதது குறித்து ஆய்வு செய்யப்படும்" என்று கூறினார்.