

பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை தேவை என்றும், உத்தரப் பிரதேச அரசைக் கலைக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து, நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. புதுவையிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுச்சேரி அண்ணா சிலை அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில முதன்மைச் செயலாளர் தேவபொழிலன் தலைமை வகித்தார். கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி. கண்டன உரையாற்றினார். நிர்வாகிகள் தலையாரி, அமுதவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், "உத்தரப் பிரதேச அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும். சிறப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்த வேண்டும்" என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதன்பின் ரவிக்குமார் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாட்டிலேயே அதிக குற்றங்கள் நடைபெறும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது. நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் பெண்கள், தலித்துகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. எனவே, குடியரசுத் தலைவர் 356-வது பிரிவைப் பயன்படுத்தி உத்தரப் பிரதேச அரசைக் கலைக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை அளிக்க வேண்டும். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.