

கனிமொழி எம்.பி. மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (அக். 6) வெளியிட்ட அறிக்கை:
"உத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸ் பகுதியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட தலித் பெண்ணின் சடலத்தைக்கூட அவரது பெற்றோர்களுக்குக்கூட காட்டாமல் நடுநிசியில் பெட்ரோல் ஊற்றி வயல்வெளியில் உத்தரப்பிரதேச காவல்துறை எரித்தது.
பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்றவர்களை உத்தரப்பிரதேசக் காவலர்கள் மிக மோசமாக, கீழே தள்ளியும், காங்கிரஸ் தொண்டர்களைத் தடியில் அடித்தும், அடுத்த நாள் சென்ற மேற்கு வங்க எம்.பி.க்களிடமும் ஆண் - பெண் என்ற வேறுபாடு, நாகரிகம் பார்க்காமல் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டனர்.
இதனைக் கண்டித்து, நேற்று (அக். 5) மாலை கிண்டியில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாகச் சென்ற திமுக எம்.பி.யும், மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழியையும் உடன் சென்ற பொறுப்பாளர்களையும் கைது செய்து, ஆளுநரிடம் அந்த மனுவைக் கூட கொடுக்க தமிழக அரசு அனுமதிக்காததும், அவரைக் கைது செய்ததும் மிகவும் வன்மையாக கண்டனத்திற்கும் உரியதாகும். அவர்கள்மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கினை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
உத்தரப்பிரதேச அரசின் காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதைக் கண்டித்து, நீதி கேட்டு ஆளுநரிடம் மகளிர் பேரணி நடத்துவதைத் தடுத்து கைது செய்திருப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பது ஆகும்".
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.