

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தில் ரோந்து காவலர்கள் உடலுடன் அணிந்துகொள்ளும் கேமரா, காவல் ஆய்வாளர்களின் வாகனங்களில் கேமரா வசதியை வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் குற்றங்கள் நடைபெறாமல் இருக்கவும் பிரத்யேக ரோந்து பணி கடந்த ஜனவரி மாதம் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. இதற்காக மாவட்டம் முழுவதும் 60 இருசக்கர வாகனங்களில் 165 ரோந்து காவலர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் பள்ளி, கல்லூரிகள், ஏடிஎம் மையங்கள், வழிபாட்டு தலங்கள் என சுமார் 1,150 இடங்களை கண்காணிக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது.
காவலர்கள் தினமும் ரோந்து வந்து செல்வது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இதனை நவீன தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் வகையில் ரோந்து காவலர்கள் குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று அங்குள்ள 'க்யூஆர் கோட்' ஸ்கேன் செய்யும் பிரத்யேக செயலி நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்மூலம் ரோந்து காவலர்களின் பணியை கண்காணிக்கும் நடைமுறை கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தொடங்கி வைத்தார். இதன் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்தபடி ரோந்து காவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்களா? என்பதை உறுதி செய்ய முடியும்.
'வி ஃபார் யூ'
தமிழகத்தில் முதல் முறையாக மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் 'வி ஃபார் யூ' என்ற திட்டம் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்டத்தில் தனிமையில் வசித்து வரும் 250-க்கும் மேற்பட்டோர் இந்த புதிய திட்டத்தால் பயன்பெற்று வருகின்றனர். ஏற்கெனவே இருசக்கர வாகன ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் தினமும் அவர்களுக்குரிய பகுதியில் தனிமையில் வசிக்கும் மூத்த குடிமக்களின் வீடுகளுக்குச் சென்று கண்காணிப்பதுடன் அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.
கேமரா கண்காணிப்பு வசதி
ரோந்து காவலர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரூ.16 லட்சத்தில் கண்காணிப்பு கேமரா வசதிகளுடன் கூடியபுதிய திட்டத்தை வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் இன்று (அக். 6) தொடங்கி வைத்தார். அப்போது, வேலூர் சரக டிஐஜி காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோந்து காவலர்களுக்கு இரவில் ஒளிரும் ஆடைகளுடன் முக்கிய நிகழ்வுகளை பதிவு செய்யும் வகையிலான கேமரா வசதியுடன், இரவில் போக்குவரத்தை சீர் செய்ய ஒளிரும் விளக்குகள், டார்ச் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், அனைத்து காவல் ஆய்வாளர்களின் வாகனங்களில் 'டேஷ் போர்டு கேமரா' வசதியும் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் வாகனங்களில் இருந்தபடி வெளிப்பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை படமாக்க முடியும்.
இரண்டு நாள் வீடியோ பதிவு
காவலர்கள் அணியும் கேமரா ஃபுல் ஹெச்டி வீடியோ தொழில்நுட்பம் கொண்டது. 32 ஜி.பி. சேமிப்புத் திறன் கொண்டது. இரண்டு நாட்கள் தொடர்ந்து பயன்படுத்த முடியும். முழு சேமிப்பு அளவை எட்டியதும் ஏற்கெனவே பதிவானவை அழிந்து புதிதாக வீடியோ காட்சிகள் சேமிக்கும் வசதியுடையது. அதேபோல், காவல் ஆய்வாளர்களின் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் ஃபுல் ஹெச்.டி. தொழில்நுட்பம் கொண்டது. 8 ஜி.பி. சேமிப்புத் திறன் கொண்டது. மேலும், க்ளவுடில் வீடியோ பதிவுகள் சேமிக்கும் வசதி இருப்பதால் தேவைப்படும் நேரத்தில் இணையம் அல்லது செல்போன் செயலி வழியாகவே பதிவான வீடியோ காட்சிகளை மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.