Last Updated : 06 Oct, 2020 03:10 PM

 

Published : 06 Oct 2020 03:10 PM
Last Updated : 06 Oct 2020 03:10 PM

அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் வயல்களைச் சேதப்படுத்திய தனியார் நிறுவனத்தைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்; இழப்பீடு தருவதாக அளித்த உறுதியை ஏற்று அமைதி

திருச்சி அருகே அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் வயல்களில் பள்ளம் தோண்டிய மண்ணைக் கொட்டி சேதப்படுத்திய எண்ணெய் நிறுவனத்தின் ஒப்பந்த நிறுவனத்தைக் கண்டித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசி) சார்பில் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடி வரை பூமிக்கடியில் பதிக்கப்பட்ட குழாய் மூலம் ஏற்கெனவே பெட்ரோல், டீசல் கொண்டு செல்லப்படுகிறது.

அதைத்தொடர்ந்து, சமையல் எரிவாயு கொண்டுச் செல்வதற்கான பணிகளை ஐஓசி நிறுவனம் முன்னெடுத்ததுள்ளது. சமையல் எரிவாயு கொண்டு செல்வதற்காக குழாய் பதிக்கும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஐஓசி ஒப்படைத்துள்ளது.

குழாய் பதிப்பதால் வயல்கள் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஐஓசி நிறுவனம் சார்பில் ஏற்கெனவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகேயுள்ள தேனேரிப்பட்டி பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்டுக்கு ரூ.3,350 வீதம் வழங்கப்பட்டுள்ளது.

வழக்கமாக குழாய் பதிப்பதற்காக தோண்டப்படும் பள்ளங்கள், சமன் நிலைக்கு வந்து, மீண்டும் விவசாயத்துக்கு பயன்படுத்த சுமார் 2 ஆண்டுகள் ஆகும்.

தேனேரிப்பட்டி பகுதியில் சுமார் 300 ஏக்கரில் நெல் விதைப்பு செய்யப்பட்டு, அவை தற்போது அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ளன. 15 நாட்களில் அறுவடை செய்ய விவசாயிகள் தயாராக இருந்தனர்.

குழாய் பதிப்பதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை கடந்த ஒரு மாதமாக மேற்கொண்டிருந்த தனியார் நிறுவனத்தார், கடந்த 2 நாட்களாக தேனேரிப்பட்டிப் பகுதியில் வயல்களில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறு பள்ளம் தோண்டி எடுத்த மண்ணை, ஒப்பந்தத்தின்படி குறிப்பிட்ட பகுதிக்குள் கொட்டாமல், விளைந்திருந்த வயலிலும் கொட்டிவிட்டனர்.

இதையறிந்த விவசாயிகள், நேற்று (அக். 5) இரவு பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை முற்றுகையிட்டு, பணிகளை நிறுத்தச் செய்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, "இந்தப் பகுதியில் சுமார் 300 ஏக்கரில் நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. 15 நாட்களில் நெல் அறுவடை செய்யவிருந்தோம். எனவே, குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் பணிகளை 15 நாட்களுக்குப் பிறகு தொடங்கியிருக்கலாம். மேலும், ஒப்பந்தத்தின்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அளவைத் தாண்டி, பள்ளம் தோண்டி கிடைத்த மண்ணை வளர்ந்திருந்த நெல் வயலில் கொட்டிவிட்டனர்.

இதனால், கூலியாட்கள் பற்றாக்குறை உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் கடன் வாங்கி நெல் விதைப்பு செய்துள்ள விவசாயிகளுக்கு அதிக மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, சேதப்படுத்தப்பட்ட வயல்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும், குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் சீராகி மீண்டும் விதைப்பு செய்ய 2 ஆண்டுகளாவது ஆகும். அதுவரை டிராக்டர் உள்ளிட்ட வேளாண் கருவிகளையும் வயல்களுக்கு சுற்றி எடுத்துச் செல்ல வேண்டும். எனவே, அதையும் கவனத்தில் கொண்டு விவசாயிகளுக்குக் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.

போராட்டம் குறித்து தகவல் அறிந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தார், இன்று (அக். 6) காலை தேனேரிப்பட்டி வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட பகுதியைத் தவிர்த்து, வயலில் சேதப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தைத் தற்காலிகமாக விலக்கிக் கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x