

புதுச்சேரி அரசு அறிவித்த விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்துப் புதுச்சேரி முன்னாள் அமைச்சரும், காரைக்கால் திமுக அமைப்பாளருமான ஏ.எம்.எச்.நாஜிம் இன்று (அக்.6) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''காரைக்கால் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு அரசின் மூலமாகத் தரப்பட வேண்டிய தொகை இன்னும் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம் விவசாயிகள் மத்தியில் உள்ளது. கடந்த ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை இன்னும் கொடுக்கப்படவில்லை. அருகில் உள்ள மாநிலங்களில் கொடுக்கப்பட்டுவிட்டது. பயிர்கள் பாதிப்பு குறித்த கணக்கீடு எடுக்கப்பட்டு, மத்திய அரசும் அதற்குரிய தொகையையும் அளித்துவிட்டது. எனினும் விவசாயிகளுக்கு இன்னும் தொகை கொடுக்கப்படாமல் இருப்பது வருத்தத்துக்குரியது. அரசு உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகையாக அறிவிக்கப்பட்டது. இத்தொகையில் 64 சதவீதம் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 36 சதவீதத் தொகையை உடனடியாகக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உளுந்துக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது. ஆனால் அத்தொகை கொடுக்கப்படவில்லை. பருத்திக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை தருவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, நிகழாண்டு அதிக அளவில் காரைக்காலில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்தனர். ஆனால், அந்தத் தொகையும் கொடுக்கப்படவில்லை.
விவசாயிகள் சாகுபடியைத் தொடங்குவதற்கு உகந்த தருணமாக உள்ள இச்சமயத்தில், ஊக்கத்தொகை கொடுக்கப்பட்டால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு உதவியாகவும் இருக்கும் என விவசாயிகள் சார்பாகவும், திமுக சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன்''.
இவ்வாறு நாஜிம் தெரிவித்தார்.