ஆம்பூரில் சுரங்கப்பாதை சீரமைப்பு தாமதத்தை கண்டித்து பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம் அறிவிப்பு: துண்டுபிரசுரம் அச்சடித்த அச்சகத்துக்கு சீல்

ஆம்பூரில் சுரங்கப்பாதை சீரமைப்பு தாமதத்தை கண்டித்து பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம் அறிவிப்பு: துண்டுபிரசுரம் அச்சடித்த அச்சகத்துக்கு சீல்
Updated on
2 min read

ஆம்பூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் உள்ளிருப்புப்போராட்டம் நடத்துவ தாக துண்டு பிரசுரம் அச்சடித்து கொடுத்த, அச்சகத்துக்கு வரு வாய்த் துறையினர் நேற்று ‘சீல்' வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்குள்ள ரயில்வே சுரங்கப்பாதை வழியாக நகர் பகுதிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், மழைக்காலங்களில் சுரங்கப்பாதையில் மழைநீர் குட்டைப்போல் தேங்குவதாலும், அங்குள்ள கழிவுநீர் குழாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழைநீருடன் கலந்து சுரங்கப் பாதையில் தேங்குவதால் ரெட்டித் தோப்பு, கஸ்பா பகுதியைச் சேர்ந்த பொதுமக்களால் அவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வந்தது.

இதைக்கண்டித்து, பொது மக்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள் ளன. பொதுமக்கள் மட்டுமின்றி, காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், ரெட்டித்தோப்பு பகுதியில் உள்ள ரயில்வே சுரங் கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பேரில், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி மற்றும் வருவாய்த் துறையினர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அங்கு ஆய்வு செய்தனர்.

பின்னர், ரெட்டித்தோப்பு பகுதியில் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆம்பூர் நகராட்சி நிர்வாகத்துக்கு ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவு மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் பொறுமையிழந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் உத்தரவை உதாசீனப்படுத்தி வரும் ஆம்பூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அக்டோபர் 6-ம் தேதி (இன்று) நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக துண்டுப்பிரசுரம் அச்சடித்து ஆம்பூர் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், கரோனா ஊரடங்கில் போராட்டம் நடத்தக் கூடாது என அறிவுறுத்திய வாணியம்பாடி வருவாய் கோட் டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி, ரெட்டித்தோப்பு பகுதி மக்களிடையே நேற்று மாலை பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர், பொதுமக்களின் போராட்டத்துக்கு துண்டு பிரசுரம் அச்சடித்து கொடுத்த அச்சகத்துக்கு சென்று ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் துண்டுப் பிரசுரங்களை எப்படி அச்சடித்துக்கொடுக்கலாம்? என விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த அச்சகம் உரிய ஆவணங்கள் இன்றி செயல் பட்டு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அச்சகத்துக்கு ‘சீல்' வைக்க வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி உத்தரவிட்டதின் பேரில், ஆம்பூர் வருவாய்த் துறையினர் நேற்று அச்சத்துக்கு ‘சீல்' வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in