மணல் கடத்தல்காரர்களுக்கு முன்ஜாமீன் இல்லை: மனுக்களைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

மணல் கடத்தல்காரர்களுக்கு முன்ஜாமீன் இல்லை: மனுக்களைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மணல் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்களின் முன்ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் மணல் கடத்தல் வழக்குகளில் உயர் நீதிமன்றம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் மணல் கடத்தல் தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருவதற்கு அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், ''மணல் கடத்தலுக்கு அதிகாரிகள் துணை போகின்றனர், நீதிமன்றம் உத்தரவிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காமல் விடுவதால் கடத்தல் தொடர்கிறது. இதனால் நீதிமன்றத்தின் பொறுமையைச் சோதிக்க வேண்டாம்'' என எச்சரிக்கை விடுத்தனர்.

மணல் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று மீண்டும் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் நோக்கத்தில் மணல் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு முன்ஜாமீன் கிடையாது என நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார்.

நீதிபதி தனது உத்தரவில், ''நாட்டையே முடக்கிப் போட்டிருக்கும் ஊரடங்கு மணல் கடத்தல்காரர்களை மட்டும் பாதிக்கவில்லை. கடுமையான நிபந்தனைகள் மற்றும் அபராதத்துடன் முன்ஜாமீன் வழங்கிய போதும் மணல் கடத்தல் குறையவில்லை. முன்ஜாமீன் வழங்கப்படும்போது விதிக்கப்படும் அபராதங்களைத் தொழில் செலவாகவே மணல் கடத்தல்காரர்கள் கருதுகின்றனர்'' எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு உட்பட்ட மதுரை, சிவகங்கை, நெல்லை உட்படப் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மணல் கடத்தலில் தொடர்புடைய பலர், முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. பின்னர் மணல் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி அனைத்து முன்ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவால் மணல் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் கட்டாயம் சிறை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in