Published : 06 Oct 2020 11:48 AM
Last Updated : 06 Oct 2020 11:48 AM

988 சத்துணவு காலியிடங்களுக்கு 50 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்தன: ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தள்ளுமுள்ளு

மதுரை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 988 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாளான நேற்று ஏராளமானோர் குவிந் தனர். 50 ஆயிரத்துக்கும் அதி கமான மனுக்கள் வந்துள் ளதால், தகுதியானோரைத் தேர்ந் தெடுப்பது சவாலானது என அலு வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு பணியிடங்களுக்கு 2017-ல் நேர்காணல் நடந்தது. எனினும் யாருமே தேர்வு செய்யப்படாத நிலையில், இந்த நடைமுறையை ஆட்சியர் டி.ஜி.வினய் ரத்து செய்தார். 358 சத்துணவு அமைப்பாளர்கள், 71 சமையலர்கள், 559 சமையல் உதவியாளர்கள் என மொத்தம் 988 பணியிடங்களை நிரப்ப மனுக்களை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது.

தினசரி ஏராளமானோர் விண்ணப்பித்த நிலையில், இறுதி நாளான நேற்று அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், மாநகராட்சியிலும் ஏராளமான பெண்கள் குவிந்தனர். மாலை 5.45 மணி வரையில் விண் ணப்பங்களை வழங்கலாம் என அறிவித்திருந்த நிலையில், நீண்ட வரிசையில் பலரும் காத்திருந்து இரவு வரையில் விண்ணப்பங்களை வழங்கினர். கல்வி, இருப்பிடம், சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ் களை இணைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தைத் தொடர்ந்து சான்றிதழ்கள் இல்லாமலும் விண்ணப்பங்களை வழங்கலாம் என்றும், நேர்காணலின்போது சான்றிதழ்களை வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பலரும் விண்ணப்பத்துடன் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று கிராமப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் விண் ணப்பங்களை அளித்தனர். இதனை சரிபார்த்து ரசீது வழங்க முடியாமல் ஒன்றிய அலுவலர்கள் சிரமப்பட்டனர்.

இது குறித்து அரசு அலுவலர்கள் கூறுகையில், ‘988 காலியிடத்துக்கு நேற்று மதியம் வரையில் 50 ஆயிரம் விண்ணப்பங்கள் வரை வந்திருக்கும். ஒரு பணியிடத்துக்கு சராசரியாக 100 பேர் வரை விண்ணப்பித்திருக்கலாம் எனத் தகவல் வருகிறது. இவ்வளவு விண்ணப்பங்களை சரிபார்த்து, நேர்காணல் நடத்தி தகுதி யானோரை தேர்வு செய்வது சவாலானது’ என்றார்.

ரூ. 8 லட்சம் வரை பேரம்

திமுக நிர்வாகி ஒருவர் கூறிய தாவது: சத்துணவு அமைப்பாளர் பணிக்கு ரூ. 8 லட்சம், சமையலர் பணிக்கு ரூ.5 லட்சம், சமையல் உதவியாளர் பணிக்கு ரூ.3 லட்சம் வரை ஆளுங்கட்சியினரால் பேரம் பேசப்படுகிறது. இதற்கும் பலத்த போட்டி உள்ளது. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏ.க்கள், ஒன்றியச் செயலாளர்கள் என பதவி அடிப்படையில் பணியிடங்களை பிரித்துக்கொண்டு சிபாரிசு அடிப் படையில் நியமிக்க மறைமுக முயற்சி நடக்கிறது.

இதற்காக அவர்களிடையேகடும் போட்டி நிலவுகிறது. ஏற்கெனவே ஆளுங்கட்சியினர் பணம் வசூலித்த நிலையில், பணி நியமனம் ரத்து செய் யப்பட்டதால், அதை சரிக்கட்டும் முயற்சி தற்போது நடக்கிறது. இடைத்தரகர்கள் பலரும் கிடைத்த மட்டும் லாபம் என்ற அடிப்படையில் பேரம் பேசி வருகின்றனர் என்றார்.

அலங்காநல்லூர் ஒன்றியம் கீழசின்னனம்பட்டி பஞ்சாயத்து தலைவர் ரமேஷ் செல்வராஜ் கூறுகையில், ‘கரோனா காரணமாக கிராமசபைக் கூட்டத்தையே ரத்து செய்த நிலையில், சத்துணவுப் பணிக்காக இவ்வளவு பேரை கூட்டம் சேரவிட்டது தவறு. தேர்வுக்குழுவில் பஞ்சாயத்து தலைவர்களை சேர்க்க வேண்டும். இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x