Published : 06 Oct 2020 09:49 AM
Last Updated : 06 Oct 2020 09:49 AM

உரம், பூச்சி மருந்துகள், உபகரணங்கள் வேளாண் விற்பனை நிறுவனங்களில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்

விவசாயத்திற்கு தேவையான உரம், பூச்சி மருந்துகள், உபகரணங்கள் வேளாண் விற்பனை நிறுவனங்களில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (அக். 6) வெளியிட்ட அறிக்கை:

"காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இயற்கையின் அருளால் விவசாய பணிகள் குறித்த நேரத்தில் தொடங்கப்பட்டு இருப்பது விவசாயிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

'காலத்தே பயிர் செய்' என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் விவசாயப் பணியை தொடங்கினாலும்ää பயிர் செழித்து வளர வேண்டுமென்றால் அதற்கான முறையான உரங்கள் இடவேண்டும். அப்போதான் நாம் எதிர்பார்க்கும் மகசூல் கிடைக்கும். தற்பொழுது காவிரி டெல்டா மாவட்டங்களில், உரங்கள், வேளாண் விற்பனை நிலையங்களில் தேவைக்கு ஏற்ப கிடைக்கவில்லை. அதனால் உழவுப் பணியை தொடங்கினாலும் தொடர் பணி முற்றுபெறாமல் இருக்கிறது.

விவசாயிகளின் அவசரத் தேவையையும், உரம் தட்டுப்பாட்;டையும் தனியார்துறையினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விலையை உயர்த்துகின்றனர். 'உழுதவன் கணக்குப் பார்த்தால்; உழக்கு கூட மிஞ்சாது' என்ற பழமொழிக்கு எற்ப பல்வேறு விவசாய செலவுக்கு இடையில் உரம் தட்டுப்பாடாலும், விலையேற்றத்தாலும், விவசாயத்தில் வருமானம் எதுவும் மிஞ்சாது என்ற நிலைதான் ஏற்படும்.

தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயப் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆகவே, அவற்றின் தேவைக்கு ஏற்ப தமிழக அரசு காலதாமதம் இன்றி அனைவருக்கும் தட்டுப்பாடு இல்லாமல் உரம் கிடைக்கு வழிவகை செய்ய வேண்டும். முன்னேற்பாட்டுடன் அனைத்து வேளாண் விற்பனை மையங்களிலும் விவசாய இடுபொருள்கள், பூச்சி மருந்துகள் மற்றும் வேளாண் உபகரணங்கள் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x