

கோடிக்கணக்கான விலை மதிப்புடைய ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 1,550 ஏக்கர் நிலங்கள் நீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த 1965-ம் ஆண்டுக்குப் பிறகு அளவீடு செய்யப்பட உள்ளதால், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து நிலங்கள் மீட்கப்படும் என மாமல்லபுரம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி கிராமத்தில் கடந்த 1835-ம் ஆண்டு பிறந்தவர் ஆளவந்தார் நாயக்கர். இவர், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இருந்து பக்கிங்ஹாம் கால்வாய் மூலம் சென்னை நகருக்கு படகுகளில் காய்கறிகள், உப்பு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் பட்டிபுலம், நெம்மேலி, கிருஷ்ணங்காரணை, கோவளம், சூளேரிக்காடு, சாலுவான் குப்பம் ஆகிய பகுதிகளில் தனக்கு சொந்தமாக இருந்த 1,550 ஏக்கர் நிலத்தை, திருவிடந்தை நித்தியக் கல்யாணப் பெருமாள், மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் மற்றும் திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு கைங்கர்யம் செய்வதற்காக கடந்த 1914-ம் ஆண்டு கோயில் பெயரில் உயில் எழுதிவைத்தார்.
அவரது மறைவுக்குப் பிறகு ஆளவந்தாரின் உயில்படி, மேற்கண்ட நிலங்களின் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டுஸ்தலசயனப் பெருமாள் கோயிலில் தேர் திருவிழா உட்பட 22 திருவிழாக்கள், நித்தியக் கல்யாணப் பெருமாள் கோயிலில் 18 திருவிழாக்கள் மற்றும் திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயிலின் ஆண்டு பிரம்மோற்சவத்தின் 10 நாட்களும் திவ்யபிரபந்தம் பாடுபவர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. மேற்கண்ட பணிகள் அனைத்தும் ஆளவந்தாரின் கட்டளையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மேற்கண்ட நிலங்களில் 40 ஏக்கர் நிலம் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆளவந்தார் அறக்கட்டளைக்கு ஆண்டுதோறும் கிடைக்கும் ரூ.24 லட்சம் வருவாய் மூலம் மேற்கண்ட கோயில்களில் கைங்கர்யங்கள் செய்யப்படுகின்றன.
குத்தகை நிலங்கள் போக மீதமுள்ள நிலங்கள் அரசியல் பிரமுகர்களின் ஆதரவோடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்கண்ட நிலங்களைப் பாதுகாக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதில், ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து 2 வார காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், அதற்கான பணிகளை அறநிலையத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளதால், அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களைப் பாதுகாப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர்பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துஉள்ளனர்.
இதுகுறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: கோயில்களின் நித்தியப்படி செய்வதற்காக மட்டும் மேற்கண்ட நிலங்களை உயில் எழுதி வைத்துள்ளார். தற்போது, இந்த நிலங்கள் கோடிக்கணக்கான விலை மதிப்புடையதாக கருதப்படுகிறது. கடந்த 1965-ம் ஆண்டுஇந்நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது.
அதன்பிறகு நில அளவீடு பணிகள் நடைபெறாததால், அருகில் உள்ள பட்டா நில உரிமையாளர்கள் அறக்கட்டளையின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர். வருவாய்த்துறையின் ஒத்துழைப்பு இல்லாததால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
தற்போது, நீதிமன்ற உத்தரவின்பேரில் மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் நில அளவீடு பணிகள் நடைபெறும் என்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், 2 வார காலத்துக்குள் அனைத்து நிலங்களையும் அளவீடு செய்வது சாத்தியமா என்பது தெரியவில்லை என்றனர்.