

கன்னியாகுமரி கடலில் மீனவர் வலையில் சிறிய ரக ஏவுகணை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
கன்னியாகுமரி சின்னமுட் டத்தை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது படகில் அவருடன் அதே பகுதியை சேர்ந்த சகாயம், சாலமோன், அலங்காரம் ஆகிய 4 பேரும் நேற்று மீன்பிடிக்க சென்றனர். கன்னியாகுமரியில் இருந்து 2 கடல் மைல் தூரத் தில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, வலையில் வித்தியாசமான பொருள் சிக்கியதை உணர்ந்தனர்.
வலையை இழுத்து பார்த்த போது அது இரண்டரை அடி நீளத்தில் சிறிய ரக ஏவுகணை என தெரியவந்தது. சின்னமுட்டம் துறைமுகத்துக்கு திரும்பிய அவர்கள், இதுகுறித்து கன்னியா குமரி மெரைன் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் சகாயஜோஸ் தலைமையில் போலீஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும் அதனை ஆய்வு செய்தனர். 12 கிலோ எடையுடன் இருந்த அந்த ஏவுகணை மிகவும் பழையதாக இருப்பதும், வெடிக்கும் தன்மையை இழந்திருப்பதையும் வெடிகுண்டு நிபுணர் குழு உறுதி செய்தது.
கப்பலில் இருந்து கடலில் விழுந் ததா? அல்லது வெளிநாட்டுக் கப்பலில் பயன்படுத்திய ஏவு கணை கடலில் மூழ்கியதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வெடிகுண்டு நிபுணர் ஒருவர் கூறும்போது, `இது நீர்மூழ்கிக் கப்பலில் பயன்படுத்தப்படும் ஏவுகணை. நீர்மூழ்கிக் கப்பலுக்கு ஆபத்து ஏற்படும் நேரத்தில் இந்த ஏவுகணை தானாக வெடித்து, கப்பல் ஆபத்தில் இருப்பதை உணர்த்தும்’ என்றார்.
ஏவுகணை கிடைத்திருப்பதை அறிந்த பொதுமக்கள் ஏராளமா னோர் சின்னமுட்டம் மீன்பிடி தளத்துக்கு வந்து அதை பார்த்து சென்றனர்.