Last Updated : 25 Sep, 2015 10:30 AM

 

Published : 25 Sep 2015 10:30 AM
Last Updated : 25 Sep 2015 10:30 AM

காலையில் தபால்காரர், இரவில் ஓவியர்: மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஓவியம் கற்றுத்தரும் கலைஞர்

காலை முதல் மாலை வரை அலுவலகங்கள், வீடுகள், கடைகளுக்கு சைக்கிளில் சென்று தபால்களை சேர்க்கிறார். இரவில் நவீன ஓவியங்கள் வரைகிறார். விடுமுறை நாட்களில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் தொடங்கி பலருக்கும் ஓவியம் கற்று தரும் பணியை செய்து வருகிறார் கலைமாமணி விருது பெற்ற புதுச்சேரியைச் சேர்ந்த கே.எம்.சரவணன்(47). புதுச்சேரி சாமிபிள்ளைத் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் கலைமாமணி விருது தொடங்கி ஏராளமான விருதுகளுடன் சிற்பங்கள், ஓவியங்கள் நிறைந்துள்ளன. தபால்காரர் பணியுடன் ஓவியம் வரையும் பணியையும் செய்யும் அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

சிறிய வயதில் படிப்பைவிட ஓவியத்தில் மிகுந்த ஆர்வம் இருந்தது. எனது தந்தை தபால்காரர். படிக்கும்போது புத்தகத்திலேயே படம் வரைந்து பார்ப்பேன். ஆனால், ஓவியம் வரைய பள்ளியில் அனுமதி கிடைக்கவில்லை. ஓவியத்தின் மீது விருப்பம் அதிகரித்தது. அறிவியல் பாடத்தில் உள்ள படங்களை நோட்டில் வரைவதை பார்த்து ஆசிரியர் பாராட்ட தொடங்கினார். அதிலிருந்து ஓவியத்தில் நிறைய கற்க ஆசை ஏற்பட்டது. 1987-ல் பாரதியார் பல்கலைக் கூடத்தில் ஓவியம் கற்க சேர்ந்தேன். ஐந்தரை ஆண்டு படிப்பு முடித்து ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தேன். அப்போது 1993-ல் பணியில் இருந்த எனது தந்தை இறந்ததால் தபால்காரராக மாறினேன்.

எனது பணியால் அனைத்து தரப்பு மக்களை சந்திப்பதுடன் அனைவரின் முகங்களை பார்த்து அதை நவீன ஓவியங்களாக வரையத் தொடங்கினேன். காலை 8 முதல் மாலை 6.30 மணி வரை அஞ்சல்துறை பணி இருக்கும். இரவு 8.30 மணி தொடங்கி ஓவியம், மெழுகு சிற்பம், சுடுமண் சிற்பம், நவீன பித்தளை சிற்பம் என எனது கலைப்பணி விடிய, விடிய நடக்கும். காலையில் கிடைத்த அனுபவங்கள் ஓவியங்களாகும்.

சுடுமண் சிற்பம் செய்யும் முறைக்காக உதவித் தொகை இரு ஆண்டுகள் கிடைத்தன. மேலும், 2002-ல் புதுச்சேரியில் கலைமாமணி விருது கிடைத்தது. தேசிய அளவிலான விருதுகளும் கிடைத்துள்ளன. வீட்டில் 1,500-க்கும் மேற்பட்ட ஓவியங்கள், சுடுமண் சிற்பங்கள், கிரானைட் - மார்பிள் - பித்தளையில் செய்த சிற்பங்கள் என ஏராளமாய் உள்ளன. எனது செராமிக் சிற்பங்கள் டெல்லி லலித் கலா அகாடமியில் உள்ளன. சண்டீகர் வடக்கு மண்டல கலாச்சார மையத்தில் பத்து அடி உயர சிற்பமும் இடம்பெற்றுள்ளன.

கடந்த 4 ஆண்டுகளாக விடுமுறை நாட்களில் ஓவியம் கற்றுக்கொடுத்து வருகிறேன். சாதாரண குழந்தைகள் தொடங்கி காது கேட்காத, வாய் பேசாத குழந்தைகள் வரை ஓவியம் கற்கின்றனர். குழந்தைகளுக்கு கற்று தரும்போது புதிய ஓவிய எண்ணங்கள் வெளிவரும். ஓவியம் கற்ற குழந்தைகள் சர்வதேச அளவிலான ஓவியப்போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனர். அங்கீகாரத்தை எதிர்பார்த்து வரையக் கூடாது. ஓவியம், சிற்பம் செய்யும்போது கிடைக்கும் சந்தோஷத்துக்காகவே அதை நோக்கி செல்கிறேன். இறக்கும்வரை ஓவியம் வரையவே எனக்கு ஆசை, என்கிறார் இயல்பாக.

கலைமாமணி விருது பெற்ற தபால்கார ஓவியர் கே.எம்.சரவணன்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x