அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பது போன்ற மாயத்தோற்றம்: மு.க. ஸ்டாலின் சாடல்

அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பது போன்ற மாயத்தோற்றம்: மு.க. ஸ்டாலின் சாடல்
Updated on
2 min read

தமிழகத்தில் சீரழிந்த சட்டம் ஒழுங்கை உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:

நான்காண்டு கால அதிமுக ஆட்சியில் குற்றங்களின் எண்ணிக்கை விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்து விட்டது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்கள் உள்ளிட்ட அனைத்து குடிமக்களும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கிறோம் என்று நினைக்கும் அளவிற்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அதை மறைத்து, சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க புள்ளிவிவரங்களை திரித்தும், மறைத்தும் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார்.

தமிழகத்தில் 2006 முதல் 2011 வரை நடைபெற்ற கழக ஆட்சியுடன் ஒப்பிடுகையில், கொலைகள், கொலை முயற்சிகள், கொள்ளைகள், கன்னக்களவுகள், ஆதாயக் கொலைகள், கற்பழிப்புகள் எல்லாமே அதிமுக ஆட்சியில் அதிகரித்து விட்டன என்பதைத்தான் தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. உதாரணமாக கழக ஆட்சியின் முதல் நான்கு வருடத்தில் 6112 ஆக இருந்த கொலை குற்றங்கள் அதிமுக ஆட்சியின் நான்கு வருடத்தில் ( 2011-2014) 7185 ஆக அதிகரித்து விட்டது. 8329 ஆக இருந்த கொலை முயற்சி வழக்குகள் 11845 ஆகி விட்டது. 419 ஆக இருந்த ஆதாயக் கொலைகள் 508 ஆக உயர்ந்து விட்டது.

2751 ஆக இருந்த கொள்ளைகள் 8119 ஆக அதிர்ச்சியடையும் விதத்தில் அதிகரித்திருப்பதை புள்ளிவிவரம் காட்டுகிறது. கன்னக் களவுகள் 15807-லிருந்து 19696 ஆக எகிறி தமிழகத்தில் யாரும் வீட்டைப் பூட்டி விட்டு வெளியில் நிம்மதியாக போய் வர முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் அதிமுக ஆட்சி காலத்தில் கற்பழிப்புக் குற்றங்கள் மட்டும் 3463 ஆக உயர்ந்து இன்று பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் அதிமுக ஆட்சியில் மாற்றப்பட்டிருக்கிறது.

ஆனால், பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முதல்வர் முயன்றுள்ளார். அவர் நேற்று அளித்த தனது பதிலுரையில் "1126 கற்பழிப்புக் குற்றங்கள்" என்று உண்மையைக் கூறுவதற்குப் பதில் இந்திய தண்டனைச் சட்டப்படி கற்பழிப்புக் குற்றங்கள் 417 என்று புள்ளிவிவரத்தை திரித்துக் கூறியிருக்கிறார். குழந்தைகள் பாலினக் கொடுமை (போஸ்கோ சட்டம்) தடுப்புச் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ள 655 கற்பழிப்பு வழக்குகளை மறைத்து விட்டார். தன் ஆட்சியில் கற்பழிப்புக் குற்றங்கள் குறைந்து விட்டன என்று ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்க இப்படியொரு கணக்கு விளையாட்டை தனது பேச்சில் அரங்கேற்றியிருக்கிறார் முதலமைச்சர்.

உண்மை என்னவென்றால், முதல்வர் கூறியிருப்பது போல் அதிமுக ஆட்சியில் கற்பழிப்புக் குற்றங்கள் 48.97 சதவீதம் குறையவில்லை. கடந்த 2014ல் மட்டும் 1126 கற்பழிப்புகள் நடந்து கற்பழிப்புக் குற்றங்கள் 21.99 சதவீதம் அதிமுக ஆட்சியில் அதிகரித்து விட்டது. "பொய்" என்ற போர்வையால் "உண்மை" என்ற இமயமலையை சுருட்டி மூட முயன்றிருக்கிறார்.

இவை ஒருபுறமிருக்க, மாநிலத்தில் நிகழ்ந்த குற்றங்களை குறைத்துக் காட்டும் பொருட்டு காவல்நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்கள் அனைத்துமே பதிவு செய்யப்படுவதில்லை என்பது ஊரறிந்த உண்மை. புகார்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை இந்திய மாநிலங்களிலேயே மிகவும் மோசமாக இருக்கும் என்று காவல்துறை அதிகாரிகளின் மனச்சாட்சியே சொல்லும். இவர்கள் என்னதான் மறைத்தாலும், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சிதறிச் சீரழிந்து விட்டது என்பதற்கு சாட்சியமாக நிற்கிறது.

மிகவும் சிறந்த தமிழ்நாடு காவல்துறை அதிமுகவின் கையில் சிக்கி, "குரங்கு கையில் சிக்கிய பூமாலை" போல் சீரழிந்து கொண்டிருக்கிறது. நடைபெறும் குற்றங்களை தடுத்து நிறுத்த முடியாமல் காவல்துறையின் கைகளும் கால்களும் அதிமுக என்ற அரசியல் கயிற்றால் முரட்டுத் தனமாக கட்டி வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் அன்றாடப் பணிகளில் அதிமுகவினர் தங்குதடையின்றி தலையிடுவதால், அதிமுக ஆட்சியில் தமிழக காவல்துறை முற்றிலும் தன் சுதந்திரத்தையும் நம்பகத்தன்மையையும் பறி கொடுத்து நிற்கிறது என்பதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது.

ஆகவே புள்ளிவிவரங்களை திரித்தும் மறைத்தும் அவைக்கும் மக்களுக்கும் தவறான தகவலைக் கொடுக்க வேண்டாம் என்று தமிழக முதலமைச்சரை நான் கேட்டுக் கொள்கிறேன். இது மாதிரி "தகவல் கலப்படத்தை" சட்டமன்றத்தின் பதிவேடுகளில் ஏறவிடாமல் பாதுகாக்க வேண்டியது அதிமுக அரசின் கடமை என்பதை நினைவுபடுத்தும் அதே வேளையில், தமிழகத்தில்சீரழிந்து கிடக்கின்ற சட்டம் ஒழுங்கை உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in