புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணி நியமனத்தில் இறுதி முடிவெடுக்க தடை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணி நியமனத்தில் இறுதி முடிவெடுக்க தடை
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டத்தில் 817 சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக இறுதி முடிவெடுக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த வெள்ளியம்மாள், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் 265 சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் 552 சமையல் உதவியாளர்களை நிரப்புவது தொடர்பாக செப். 28-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதில் விண்ணப்பிக்க கடைசி தேதி செப். 30 என குறிப்பிடப்பட்டிருந்தது. விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம் வழங்கவில்லை. மேலும் இடஒதுக்கீடும் பின்பற்றப்படவில்லை.

நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. ஆளும்கட்சியினருக்கு வேண்டியவர்கள் பலர் ஏற்கெனவே பணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஆட்சியரின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், இடஒதுக்கீடு மற்றும் வெளிப்படைத்தன்மையை பின்பற்றி பணியிடங்களை நிரப்பவும் உத்தரவிட வேண்டும். அதுவரை ஆட்சியரின் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக். 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக இறுதி முடிவை எடுக்கக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in