மூன்றாம் பாலினத்தவருக்கான சலுகைகள் முறையாக வழங்கப்படக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மூன்றாம் பாலினத்தவருக்கான சலுகைகள் முறையாக வழங்கப்படக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சலுகைகள் மறுக்கப்படுகின்றன. குறிப்பிட்ட மூன்றாம் பாலினத்தவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தால் அவருக்குப் பட்டியலின வகுப்புக்கான சலுகைகள் மறுக்கப்படுகின்றன என்பன உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்க மறுப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருநங்கை, திருநம்பி எனும் மூன்றாம் பாலினத்தவர்களைத் தனிப் பிரிவாகப் பிரித்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் என்ற திருநங்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையில் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், “மூன்றாம் பாலினத்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்து, இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மூன்றாம் பாலினத்தவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தால் அவருக்குப் பட்டியலின வகுப்புக்கான சலுகைகள் மறுக்கப்படுகின்றன. திருநங்கைகள் நலவாரியத்தில் அரசுத் துறையினர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்தப் பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை” எனக் குற்றம் சாட்டப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், இது சம்பந்தமாக அக்டோபர் 29-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in