

ஆழியாறு அணையிலிருந்து வரும் அக்டோபர் 7-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களில் உள்ள 22116 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோயம்புத்தூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், ஆழியாறு படுகை ‘அ’ மண்டலத்தின் பாசனப் பகுதிகளுக்கு ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட கோரிக்கை எழுந்தது.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்தன.
அவர்களின் வேண்டுகோளினை ஏற்று, கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு படுகை ‘அ’ மண்டலத்தின் பொள்ளாச்சி கால்வாய் ‘அ’ மண்டலம், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் ‘ஆ’ மண்டலம் சேத்துமடைக் கால்வாய் ‘அ’ மண்டலம் மற்றும் ஆழியாறு ஊட்டுக் கால்வாய் ‘அ’ மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு 7.10.2020 முதல் உரிய இடைவெளி விட்டு 80 நாட்களுக்கு மொத்தம் 2548 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட ஆணையிடப்பட்டுள்ளது.
இதனால், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களில் உள்ள 22116 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
மேலும், விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.