Last Updated : 05 Oct, 2020 05:00 PM

 

Published : 05 Oct 2020 05:00 PM
Last Updated : 05 Oct 2020 05:00 PM

கரோனாவால் தந்தை இறந்த ஆத்திரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை வெட்டிய மகன்: கேரளாவில் பதுங்கியவரைப் பிடிக்க தனிப்படை தீவிரம்

களியக்காவிளை அருகே கரோனாவால் தந்தை இறந்த ஆத்திரத்தில் உடலைக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனரை மகன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்துள்ள படந்தாலுமூட்டை சேர்ந்தவர் குட்டப்பன் (60). தொழிலாளியான இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கரோனா பரிசோதனை செய்தபோது கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் அங்கு 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறந்த குட்டப்பனின் உடலை அடக்கம் செய்வதற்கு அரது வீட்டு தோப்பில் சுகாதாரத்துறை வழிகாட்டுதல் படி ஏற்பாடுகள் நடந்தது. இதற்காக ஆம்புலன்ஸ் மூலம் குட்டப்பனின் உடல் எடுத்து வரப்பட்டது.

ஆம்புலன்ஸை நாகர்கோவிலைச் சேர்ந்த பொன் ஜோஸ் (35) என்பவர் ஓட்டினார். குட்டப்பனின் உடலை ஆம்புலன்ஸில் இருந்து கீழே இறக்க முற்பட்டபோது குட்டப்பனின் மகன் சிபின் (23) என்பவர் சுகாதாத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தனது தந்தையை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றதால் தான் அவர் உயிர் இழக்க நேர்ந்தது எனக் கூறி ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பொன் ஜோசின் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதில் அவர் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் பொன் ஜோசை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆம்புலன்ஸ் ஓட்டுனர் வெட்டப்பட்டது குறித்து களியக்காவிளை காவல் நிலையத்தில் சுகாதாரத்துறையினர் புகார் அளித்தனர். இந்நிலையில் அங்கிருந்து சிபின் பக்கத்தில் உள்ள கேரளாவிற்கு தப்பி சென்றதாக தெரிகிறது. அவரை பிடிக்க தனிப்படை போலீஸார் கேரளா விரைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x