

அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்ட பின்னரே பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் டாக்டர் எஸ்.ஆனந்த குமார் இன்று (அக்.5) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், எந்த ஒரு அடிப்படை ஆதாரம் மற்றும் தரவுகள் இல்லாமல் அக்.15-க்கு பிறகு பள்ளிகளைத் திறக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஆணை ஒன்றில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் முடிவை மாநில முதல்வர் ரத்து செய்துள்ளார். அக்.15-க்குப் பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கலாம் என மத்திய அரசு சொல்லியிருக்கும் நிலையில், புதுச்சேரியில் முன்கூட்டியே பள்ளிகளைத் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் இந்த அவசர முடிவு பொதுமக்களிடையே சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இயங்கும் நோய் இயக்கவியல், பொருளாதாரம் மற்றும் செயல்திட்ட மையத்தின் விஞ்ஞானிகள், தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் தொற்றாளர்கள் இடையே நடத்திய ஆராய்ச்சி முடிவுகளின்படி, ஒரே வயதுடையோரிடையே இருக்கும் தொடர்புகள் வழியாகக் கரோனா தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கண்டறிந்துள்ளனர். கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் வயது வரம்பு 40 முதல் 62 ஆக உள்ளது.
அதாவது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் இந்த வயது வரம்புக்குள் இருப்பர். எனவே, இந்த ஆய்வறிக்கை அடிப்படையில் அணுகும்போது மாணவர்கள், பெற்றோர்கள் உயிரோடு விளையாடும் வகையில் புதுச்சேரி அரசின் முடிவு உள்ளது. இதற்குத் துணைநிலை ஆளுநரும் உடந்தையாக உள்ளார். தனியார் கல்வி நிறுவனங்கள் பள்ளிகளைத் திறக்க அழுத்தம் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழக அரசு, பள்ளிகள் திறப்பதை நிறுத்தி வைத்திருக்கும் வேளையில், மத்திய அரசின் வழிகாட்டுதலையும் மீறி புதுச்சேரியில் அவசரமாகப் பள்ளிகளைத் திறக்கும் முடிவுக்கான காரணம் குறித்து மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்.
தற்போது, ஆன்லைன் மூலம் கல்வி கற்றல் இந்திய அளவில் பல இடையூறுகளுக்கு இடையே சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. எனவே, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் உயிரோடு மத்திய, மாநில அரசுகள் விளையாடக்கூடாது. அதனால், அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்ட பிறகே பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வேண்டும். இது தொடர்பாக இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் புகார் அனுப்பியுள்ளது''.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.