பிற கட்சியினரைக் கூட்டணியில் சேர்ப்பதை திமுக தலைமை முடிவு செய்யும்: இரா.முத்தரசன் பேட்டி

பிற கட்சியினரைக் கூட்டணியில் சேர்ப்பதை திமுக தலைமை முடிவு செய்யும்: இரா.முத்தரசன் பேட்டி
Updated on
1 min read

பிற கட்சியினரைக் கூட்டணியில் சேர்ப்பது குறித்து திமுக தலைமை முடிவு செய்யும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் அளித்த பேட்டியில், "பிற நாட்டு கம்யூனிஸ்டுகள் அமெரிக்காவில் குடியேற தடை விதித்து சட்டம் இயற்றி உள்ளனர்.

கம்யூனிஸ்டுகள் மீதுள்ள அச்சத்தின் காரணமாக அமெரிக்கா இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இப்படி அச்சுறுத்தி கம்யூனிஸ்டுகளை தடை செய்து விட முடியாது. பந்து அடித்து எழும்புவதை போன்று கம்யூனிஸ்ட் வளர்ச்சி பெறும்.

கரோனாவால் மக்கள் போராட்டம் நடத்த முடியாத சூழலில் மத்திய அரசு அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வேளாண் மசோதா போன்ற சட்டங்களை நிறைவேற்றலாம் என்று சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுகிறது. பாசிச நடவடிக்கையாக மத்திய அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

வேளாண் சட்டத்தைக் கண்டித்து வரும் 12-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெறும்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டங்களை எதிர்க்காமல் முதல்வரும் ,துணை முதல்வரும் மக்கள் நலனுக்காகத் தான் இருக்கிறோம் எனக் கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

அதிமுகவின் வேட்பாளர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், தீராமல் இருப்பதற்கும் மோடி இருக்கிறார்.

திமுக கூட்டணி, சீட்டு ஒதுக்கீடு குறித்து தோழமை கட்சிகளோடு கலந்து பேசி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் எப்பொழுதும் கிண்டல், கேலியாக, நையாண்டியாக பேசக்கூடியவர். கூட்டணிக் கட்சியினரை விமர்சனம் செய்துவிட்டு வருத்தம் தெரிவித்துவிட்டார். அதனால் அது முடிந்து போன ஒன்று.

திமுக கூட்டணியில் பாமக வந்தால் பார்த்துக்கொள்ளலாம். அதன் பின்பு விசிக வெளியேறுவது குறித்து பேசுவோம். பிற கட்சியினரை கூட்டணியில் சேர்ப்பது குறித்து திமுக தலைமை முடிவு செய்யும்" எனத் தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in