

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தவறான ஊசி மருந்தால் பெண் மரணமடைந்துள்ளதாகவும், அதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரியும் இறந்தவரின் மகன் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளார்
கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு அடுத்த செம்மங்கலையை சேர்ந்தவர் அனிஷ்(24). இவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சுகந்தியிடம் ஒரு மனுவை வழங்கியுள்ளார்.
அந்த மனுவில், "என் தாயார் சந்திரிகா (50), கடந்த மாதம் 25-ம் தேதி குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருந்தார்.
கடந்த 26-ம் தேதி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு காரோனா இருப்பதாக பரிசோதனை முடிவில் தெரிய வந்ததால் காரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் காரோனா இல்லை என்று பரிசோதனை முடிவு வந்ததால் அன்றைய தினமே மாலை சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் தாயாருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் நேற்று வீட்டுக்குப் போகலாம் என்று தெரிவித்தார். மாலை நான் அருகில் இருக்கும் போது என் தாயாருக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தினர்.
மருந்து செலுத்திய தாயாருக்கு கை கால் இழுத்து கொண்டது. ஆனால் அதற்குள் என் தாயார் இறந்து விட்டார். என் தாயாரை காலையில் மருத்துவர் வீட்டிற்கு செல்லலாம் என்று கூறிய நிலையில் அவர் இறந்தது அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே ஊசி மருந்தால் தான் என் தாயார் இறந்திருக்க வேண்டும். எனவே தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.