மதுரை வேளாண் கல்லூரியில் பல்பயிர் பூங்கா: புதிய ரகங்களைப் பயிரிட்டு விவசாயிகளுக்கு நேரடி செயல் முறை விளக்கம்

மதுரை வேளாண் கல்லூரியில் பல்பயிர் பூங்கா: புதிய ரகங்களைப் பயிரிட்டு விவசாயிகளுக்கு நேரடி செயல் முறை விளக்கம்
Updated on
2 min read

மதுரை வேளாண் பல்கலைக்கழகத்தில் பல்பயிர் பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தாங்கள் அறிமுகம் செய்யும் பல்வகை புதிய பயிர் ரகங்களைப் பயிரிட்டு, அந்தப் பயிர்களில் கூடுதல் மகசூல் உற்பத்தி செய்து விவசாயிகளை அதை நேரடியாக அழைத்து வந்து பார்வையிடச் செய்யும் வகையில் பல்கலைக்கழகம் பூங்காவை அமைத்துள்ளது.

கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் ஒவ்வோர் ஆண்டும் புதிய பயிர் ரகங்களை வெளியிடும். அந்தப் பயிர் விதைகள், தமிழகம் முழுவதும் வேளாண் அறிவியல் நிலையங்களில் விவசாயிகளுக்கு விற்கப்படும்.

அதற்கான சாகுபடி தொழில்நுட்பங்கள், ஆலோசனைகளை அங்குள்ள வேளாண் வல்லுநர்கள் வழங்குவார்கள். பின்னர்,அந்தப் பயிர் ரகங்களை நேரடியாக பயிரிட்டு, அதன் சாகுபடி தொழில்நுட்பம், மகசூலை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு நேரடியாக செயல் விளக்கம் காட்டமாட்டார்கள்.

தற்போது முதல் முறையாக ஒவ்வோர் ஆண்டும் வேளாண் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்யும் புதிய பல்வகை பயிர் ரகங்களை குறிப்பிட்ட பரப்பளவில் சாகுபடி செய்து அதில் அதிக மகசூல் ஏற்படுத்தி விவசாயிகளிடையே அதை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் மதுரை வேளாண் கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலை வேளாண் பண்ணையில் பல் பயிர் பூங்கா தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் பூங்காவில், தற்போது கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக்தால் சமீபத்தில் வெளியிட்ட ரகங்கள், சூரியகாந்தி(கோஎச்-3), நிலக்கடலை (டிஎம்வி-14), பாசிப்பயிறு (விபிஎன்4), தட்டைப்பயிறு (விபிஎன்-3), தீவன தட்டைப்பயிறு(கோ9), வரகு(டிஎன்ஏயூ 86), சோளம்(சிஒ 32) போன்றவை பரிந்துரைக்கப்பட்ட சாகுபடி முறைகளை கொண்டு பயிரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செல்வி ரமேஷ், தொழில்நுட்ப வேளாண் வல்லுநர் பேராசிரியர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கூறியதாவது:

மதுரை வேளாண் அறிவியல்நிலைய வேளாண் விஞ்ஞானிகளுடன் விவசாயிகள், கிராமபுற இளைஞர்கள், வேளாண் விரிவாக்க பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் நேருக்கு நேர், இந்த பல் பயிர் பூங்காவில் சந்தித்து பயிர் சாகுபடி தொழில்நுட்பங்களான பயிர் சாகுபடி நில தயாரிப்பு , விதை அளவு, விதைக்கும் இடைவெளிகள், உரம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளை நேரடியாக பார்ததும் கேட்டும் தெரிந்து கொள்ளச் செய்வதே இந்த பூங்கா அமைப்பதின் முக்கிய பணியாகும்.

பருவத்தே பயிர் செய் என்ற பழமொழிக்கேற்ப பருவத்திற்கேற்ற பயிர் ரகளைங்களைத் தேர்வு செய்து பரிந்துரைக்கப்பட்ட சாகுபடி முறைகளைக் கொண்டு, இந்த பல் பயிர் பூங்காவில் பயிர் சாகுபடி செய்து, அதில் அதிக மகசூல் பெறுவது எப்படி என்பதை விவசாயிகளுக்கு நேரடியாக செயல்விளக்கம் செய்து காட்டுவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

தற்போது வேளாண் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்த புதிய ரக (விபிஎன்-3) தட்டைப்பயிரானது 75 முதல் 85 நாட்கள் வளரக்கூடியது. புரட்டாசி பட்டம் (செப்டம்பர்-அக்டோபர்) பயிரடுவதற்கு ஏற்ப பருவமாகும். இதில் 25.2 சதவீதம் புரதசத்து அமைந்திருப்பது இதன் முக்கிய சிறப்பியல்பாகும். சூரியகாந்தி (கோஎச்-3 புதிய ரகம்) பயிரானது 90 முதல் 95 நாட்கள் வளர கூடியது. இறவை பருவத்தில் ஆண்டு முழுவதும் பயிரிட ஏற்றது.

தனியார் வீரிய ஒட்டு ரகங்களுக்கு ஒத்த மகசூலும், 42 சதவீதம் எண்ணெய் சத்து இருப்பதும் இந்த ரகத்தின் சிறப்பாகும். நிலக்கடலை (டிஎம்வி-14புதிய ரகம்) 95 முதல் 100 நாட்கள் வரையாகும். இறவை மற்றும் மானாவாரியல் எல்லா பருவங்களுக்கும் ஏற்ற ரகமாகும். எண்ணெய் சத்து 4 சதவீதம் உள்ளது. பாசிப்பயிறு (விபிஎன்-4புதிய ரகம்) 65 முல் 70 நாட்கள் வயதுனடையது செடிகளின் நுனிப்பகுதிகளில் காய்கள் வந்தாலும் மேலும் ஒரே நேரத்தில் முதிர்வடைவதாலும் இயந்திர அறுவடைக்கு மிகவும் ஏற்ற ரகமாக கருதப்படுகிறது.

தீவன தட்டைப்பயிறு(கோ-9 புதிய ரகம்) ஆண்டு முழுவதும் இறவை பயிராக பயிர் செய்வதோடு தீவனத்திற்கு 50 முதல் 55 நாட்கள் வரையும் விதைக்கு 90 முதல் 95 நாட்கள் வரையும் வளரும் தன்மை உடையது. புரதச்சத்து 21.56 சதவீதமாக உள்ளது.

சோளம்(சிஒ-32புதிய ரகம்) பயிரானது 105 முதல் 110 நாட்கள் வரை கால அளவு கொண்டது. தானியம் மற்றும் தீவனத்திற்கு ஏற்ற ரகம். வரகு(டிஎன்ஏயூ புதிய ரகம்) பயிரானது 95 முதல் 110 நாட்கள் வளரக்கூடியது.

ஆடிப்பட்டம் வரகு சாகுபடிக்கு ஏற்றது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. மதுரை வேளாண்மை கல்லூரி வளாகத்தில் உள்ள அறிவியல் நிலையத்திலுள்ள இந்த பல்லுயிர் பூங்காவை விவசாயிகள் பார்வையிட வரலாம். அதில் பயிரிடப்பட்டுள்ள ரகங்களையும், அதன் பயன்களையும் தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in