

புதுச்சேரி அரசின் பள்ளிகளைத் திறக்கும் முடிவினால் மாணவர்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதிகாரத்தில் உள்ளோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என காரைக்கால் போராளிகள் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாகப் போராளிகள் குழு நிர்வாகிகள் காரைக்கால் தெற்கு மண்டலக் காவல் கண்காணிப்பாளர் கே.எல்.வீரவல்லபனிடம் இன்று(அக்.5) நேரில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
''காரைக்கால் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்றாளரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள்தோறும் ஏற்படும் உயிரிழப்புகள் தேசிய விகிதத்தை விட அதிகமாக உள்ளன. இந்நிலையில் அக்.5-ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படத் தொடங்கும் என்ற புதுச்சேரி அரசின் அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தமிழக பாடத்திட்டத்தையே புதுச்சேரி அரசு பின்பற்றுகிறது. தமிழகத்தில் அக்.1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசாணையைத் தமிழக முதல்வர் ரத்து செய்துள்ளார். ஆனால் புதுச்சேரி அரசுக்கு மாணவர்கள் மீதோ, சமூக ஆரோக்கியத்தின் மீதோ அக்கறை இல்லை. ஆகவே பள்ளிகளை திறக்கும் முடிவைப் புதுச்சேரி அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
பள்ளிகள் திறப்பால் நோய்த் தொற்று ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும்பட்சத்தில், பள்ளிகள் திறக்கக் காரணமான துணநிலை ஆளுநர், முதல்வர், துறை அமைச்சர், தலைமைச் செயலர், கல்வித்துறை இயக்குனர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்கள் கோரினால் காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இல்லையெனில் பள்ளி திறப்பதால் நோய்த் தொற்று ஏற்படாது என்பதைத் தொடர்புடைய அதிகாரிகளோ, ஆட்சியாளர்களோ பிரமாணப் பத்திரத்தைத் தாமாக முன்வந்து பெற்றோர்களிடமும், நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்க வழிவகை செய்ய வேண்டும்''.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.