

காந்தி ஜெயந்தி முன்னிட்டு தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 1629 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
தொழிலாளர் துறையால் பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தேசியபண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைச் சட்டம் 1958-ன் படி தேசிய விடுமுறை நாட்களான குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு நாட்களும், இது தவிர ஐந்து பண்டிகை விடுமுறை நாட்கள் ஆக மொத்தம் ஒன்பது நாட்கள் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு விடுமுறை அளிக்காத கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை அன்றைய தினம் பணிக்கு அமர்த்தப்பட்டால் அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அனுமதித்து சம்மந்தப்பட்ட தொழிலாளிக்கு அறிவிப்பு அளித்து அதன் நகலினை சம்மந்தப்பட்ட ஆய்வர்களுக்கு அனுப்பி விடுமுறை தினத்தன்று நிறுவனத்தில் அதனை காட்டியும் வைக்க வேண்டும்.
தொழிலாளர் ஆணையர் நந்தகோபால், அக்.02 காந்தி ஜெயந்தி அன்று தமிழ்நாடு தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை சட்டத்தின் விதிமுறைகளை அனுசரிக்காமல் விதிகளை மீறுவோர் மீது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டதன் பேரில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துறை அமலாக்க அலுவலர்களால் கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு தேசிய, பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை சட்ட விதிகளை மீறிய செயலுக்காக தமிழகத்தில் உள்ள 820 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீதும், 720 உணவு நிறுவனங்கள் மீதும், 77 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மீதும், 11 தோட்ட நிறுவனங்கள் மீதும், 1 பீடி தயாரிக்கும் நிறுவனம் மீதும் ஆக மொத்தம் 1629 நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது”.
இவ்வாறு தொழிலாளர் நலத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.