

கரோனா பரவலின் தொடக்கத்தில் இருந்தே நோயாளிகள் எதிர்கொண்ட மிகப்பெரிய சிக்கல், ரத்தம் கிடைப்பது தொடர்பானதுதான். கல்லூரிகளுக்குள் நடக்கும் ரத்ததான முகாம்களின் வாயிலாகவே அதிக அளவிலான யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு வந்தது. கரோனாவால் கல்லூரிகளும் மூடப்பட்டுவிட்ட நிலையில் அந்தப் பணியைக் கையில் எடுத்து, ரத்தக் கொடையாளர்கள் முழு மூச்சாக உழைத்து வருகின்றனர். அவர்களில் நாஞ்சில் ரத்த தான அறக்கட்டளையின் பங்கும் முக்கியமானது.
குமரி மாவட்டத்தில் பிளாஸ்மா சிகிச்சைக்கு முதல் ரத்தம் கொடுத்தவரும், நாஞ்சில் ரத்த தான அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளருமான நாஞ்சில் ராகுல், கரோனா கால ரத்த சேகரிப்பிற்காகக் குமரியின் பட்டி, தொட்டியெங்கும் பயணிக்கிறார்.
அவர் இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறுகையில், ''மார்ச் 25-ம் தேதி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோதே மக்கள் வீடுகளில் முடங்கினர். கர்ப்பிணிகள், நோயாளிகள் என பலருக்கும் அதிகப்படியான ரத்தத்தின் தேவை உருவான காலம் அது.
அரசு மருத்துவமனை பக்கம் போனாலே கரோனா வந்துவிடும் என்பதாகத் தொடக்கத்தில் அச்சமும் உச்சத்தில் இருந்தது. ஆனாலும், ரத்தக் கொடையாளர்கள் ரத்தம் தரத் தயங்கவில்லை. ஆனால், அவர்களது குடும்பத்தினரோ வெளியே சென்று வந்தால் வீட்டுக்குள் கரோனா வந்துவிடும் எனத் தடுத்தனர். அப்போதே அவர்களின் வீடுகளுக்குப் போய் சம்மதிக்க வைத்து, கொடையாளர்களை அழைத்துப் போனோம். ஒரு வீட்டில் 4 மணி நேரம் பெற்றோரிடம் பேசி சம்மதிக்க வைத்தோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
எங்களது நாஞ்சில் ரத்த தான அறக்கட்டளை சார்பில் மார்ச் 25 முதல் செப்டம்பர் 30 வரையில் தமிழகம் மற்றும் கேரளாவில் சுமார் 1,780-க்கும் அதிகமான யூனிட்டுகள் ரத்தத்தை ஏற்பாடு செய்து அரசுக்கு வழங்கினோம். அதிலும் இது முழுக்க, முழுக்க அரிய வகை ரத்தத்தைச் சேகரிப்பதையே இலக்காகக் கொண்ட பயணம் ஆகும். ஒருகட்டத்தில் அரசு மருத்துவமனையில் ரத்தப் பற்றாகுறையைப் போக்க ரத்த தான முகாம் நடத்த அரசு உத்தரவிட்டது.
அப்போது, தமிழகத்தில் முதன் முதலில் ரத்த தான முகாமினைப் போதிய தனிமனித இடைவெளி மற்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஏப்ரல் 22-ம் தேதி நாகர்கோவிலில் நடத்திக் காட்டினோம். அது பெருந்தொற்றும், அதன் மீதான பயமும் உச்சத்தில் இருந்த லாக்டவுன் காலம்!
எங்கள் அமைப்பின் தூண்டுதலால் இதுவரை 64 பேர் பிளாஸ்மா தானம் கொடுத்துள்ளனர். நாஞ்சில் ரத்த தான அறக்கட்டளையில் சபரிஷ், விக்னேஷ், கணபதி, சுபாஷ், மகாராஜன், நிஜாமுதின், ஜூலி, கபிலன் என மேலும் சில ஒருங்கிணைப்பாளர்களும் இதற்காக முழுமூச்சாக உழைக்கிறார்கள்.
வசதி படைத்தவர்கள் பணத்தால் ஏழைகளுக்கு உதவி செய்கின்றனர். ஆனால் வசதியிருப்போருக்கும், இல்லாதவர்களுக்கும் கடவுள் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரு வாய்ப்பு நம் உடலுக்குள் ஓடும் ரத்தம். அதைக் கொடையாகக் கொடுத்தாலே இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்றலாம்'' என்று நாஞ்சில் ராகுல் தெரிவித்தார்.