

சுற்றுச்சூழலுக்குப் பெரும் சவாலாக விளங்கும் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து திட எரி பொருளைத் தயாரித்து வருகிறார் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.பரமக்குடி அருகே உள்ள பனிதவயல் கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் வீ.அன்பரசன்(23). இவர் நீட்ஸ் திட்டத்தின் கீழ் அரசின் மானியக் கடனுதவி பெற்று பிளாஸ்டிக் கழிவில் இருந்து சுற்றுப்புறத்துக்கு உகந்த திட எரிபொருள் உற்பத்தி செய்யும் சிறு தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இது குறித்து வீ.அன்பரசன் கூறியதாவது:
கடந்த 2018-ம் ஆண்டு பெட்ரோலியம் பொறியியல் பட்டப் படிப்பை முடித்ததும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவிடம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பிளாஸ்டிக் கழிவில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் திட்டம் குறித்தும், இதை முழுமையாக செயல்படுத்த உதவிட வேண்டியும் மனு அளித்தேன். இத்திட்டம் மாசு கட்டுப் பாட்டு வாரியத்தின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு சுகா தாரத்துக்கு உகந்தது என சான்றளிக்கப்பட்டுள்ளது. இதனால் என்னை ஊக்கு விக்கும் விதமாக ஆட்சியர் விருப்புரிமை நிதியில் இருந்து முதற்கட்டமாக ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளித்தார். மேலும் இது குறித்து சுயதொழில் தொடங்க மாவட்ட தொழில் மையம் மூலம் நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.2.25 லட்சம் அரசு மானியத்துடன் ரு.13.75 லட்சம் மதிப்பில் கடனுதவியும் கிடைத்தது.
கடந்த ஓராண்டு காலமாக பரமக்குடி நகராட்சி யில் இருந்து மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களைச் சேகரித்து நிலக்கரி வடிவத்தில் திட எரிபொருளை தயாரிக்கிறோம். இதை தொழிற்சாலைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் எரிபொருளாகப் பயன்படுத்துகின்றன. இந்த எரிபொருள், நிலக்கரியை விட அதிக நேரம் நின்று எரியக் கூடியது. மேலும் சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் தடுக்கிறது. தற்போது 25 டன் ஆர்டர்கள் கிடைத்துள்ளன. ஆனால் கரோனா பரவல் காரணமாக மிகக் குறைந்த அளவிலேயே உற்பத்தி செய்கிறோம் என்றார்.