

தருமபுரி மாவட்டம் வாணியாறு அணையின் நீர்மட்டம் 52 அடியைக் கடந்து வேகமாக உயர்ந்து வருகிறது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் சேர்வராயன் மலை அடிவாரத்தில் உள்ளது வாணியாறு அணை. சேலம் மாவட்டத்தில் சேர்வராயன் மலைத் தொடரில் அமைந்துள்ள ஏற்காடு மலையின் வடக்கு பகுதி சரிவு, இந்த அணைக்கான பிரதான நீராதாரப் பகுதியாக உள்ளது. இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்ததால் வாணியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து சேர்வராயன் மலைத்தொடர் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. எனவே, வாணியாறு அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
அணையின் மொத்த உயரம் 65.27 அடி. தற்போது அணையின் நீர்மட்டம் 52 அடியைக் கடந்துள்ளது. இன்னும் சில நாட்களுக்கு சேர்வராயன் மலைத்தொடரில் மழை தொடர்ந்தால் வெகு விரைவில் வாணியாறு அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாணியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் அணையின் நேரடி பாசனப் பரப்புப் பகுதி விவசாயிகள், அணை நீரால் நிலத்தடி நீர் பெறும் விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.