Published : 05 Oct 2020 12:24 PM
Last Updated : 05 Oct 2020 12:24 PM

குற்றாலத்தில் சாரல் சீஸன் முடிந்தும் நீடிக்கும் தடை: வியாபாரிகளுக்கு ரூ.150 கோடி வருவாய் இழப்பு

சாரல் சீஸன் முடிந்தும் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை உத்தரவு நீடிக்கிறது. சீஸன் முழுவதும் தடை விதிக்கப்பட்டதால் வியாபாரிகள், விடுதி உரிமை யாளர்கள், வாடகைக் கட்டிட உரிமையாளர்கள், ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் ரூ.150 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான குற்றாலம் மலைப் பகுதியில் மழை பெய்தால் அருவிகளில் தண்ணீர் கொட்டும். தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை குளிர்ந்த காற்று, சாரல் மழை என, காலநிலை இதமாக இருக்கும். எனவே, இந்த காலகட்டத்தில் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருவது வழக்கம்.

இந்த ஆண்டில் கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தற்போது வரை தொடர்கிறது. இதனால், குற்றாலத்தில் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பலமுறை கோரிக்கை விடுத்தும் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்படவில்லை.

வெறிச்சோடி காணப்படும்

இதுகுறித்து குற்றாலம் வியாபாரிகள் சங்க நிர்வாகி காவையா கூறும்போது, “குற்றாலத்தில் தனியார் கட்டிடங்கள், பேரூராட்சி கட்டிடங்கள், அறநிலையத்துறை கட்டிடங்களில் சுமார் 500 வியாபாரிகள் கடை வைத்து ள்ளனர். விடுதிகளும் ஏராளமாக உள்ளன. நூற்றுக் கணக்கான வீடுகள் சீஸன் காலத்தில் சுற்றுலாப் பயணி களுக்கு வாடகைக்கு விடப்படுகின்றன. ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள் ஏராளமானோருக்கும் சுற்றுலாப் பயணிகள் வருகையே வருவாய் கிடைக்கச் செய்யும்.

தென்மேற்கு பருவமழை 4 மாதங்கள் நீடித்தாலும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். மேலும், சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் செல்லும் காலமான கார்த்திகை, மார்கழி மாதங்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற 7 மாதங்களும் குற்றாலம் வெறிச்சோடி காணப் படும்.

பேரூராட்சிக்கும் இழப்பு

எனவே, சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் இந்த 5 மாதங்களில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே ஆண்டு முழுவதும் வியாபாரிகள் குடும்பம் நடத்த வேண்டும். ஆனால், இந்த ஆண்டில் சாரல் சீஸன் தொடங்குவதற்கு முன்பு விதிக்கப்பட்ட தடை சாரல் சீஸன் முடிந்த பின்பும் தொடர்கிறது. இதனால், குற்றாலம் வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள், கட்டிடங்களை வாடகைக்கு விடுவோர், ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பினருக்கும் சேர்த்து சுமார் 150 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இனியாவது குற்றாலத்தில் தடையை நீக்க வேண்டும்” என்றார்.

குற்றாலத்தில் விதிக்கப்பட்ட தடையால் பேரூராட்சி நிர்வாகம், அறநிலையத் துறை நிர்வாகத்துக்கும் கடைகள் வாடகை, பார்க்கிங் ஏலம் வகையில் சுமார் 4 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை 4 மாதங்கள் நீடித்தாலும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x