

விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டு காவலர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் கூடுதல் எஸ்.பி. அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் கடந்த ஜனவரியில் மூலிகைத் தோட்டம் அமைக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
தற்போது இந்த மூலிகைத் தோட்டத்தில் பல்வேறு வகையான அரியவகை மூலிகைச் செடி களும், மலர்ச் செடிகளும் நட்டு பராமரிக்கப்படுகின்றன.
இந்த மூலிகைத் தோட்டத்தில் சந்தனம், திருநீற்றுப் பச்சிலை, வல்லாரை, நிலவேம்பு, திப்பிலி, பொன்னாவரை, மருது, சங்கன் குப்பி, கருங்குறிஞ்சி, செந்நாயுருவி, முடக்கத்தான், மேகசஞ்சீவினி செடிகளும், எலுமிச்சை, இலுப்பை, பூவரசு, வேம்பு மரக்கன்றுகளும், பிரண்டைக் கொடி, மா, எட்டி புங் கை, சரக்கொன்றை, நாவல் மரக் கன்றுகளும், சிவப்புக் கற்றாழை உள்பட பல்வேறு வகையான கற்றாழைச் செடிகளும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து கூடுதல் எஸ்.பி. மாரிராஜன் கூறியதாவது:
மாவட்டக் காவல் கண்காணிப் பாளரின் வழிகாட்டுதல்படி இந்த முலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரிய வகை மூலிகைச் செடிகளை சேகரித்துச் சோதனை முறையில் இங்கு நட்டு வைத்தோம். அவை வளரும் தன்மையைக் கண் காணித்து தற்போது பல்வேறு விதமான மூலிகைச் செடிகளை நட்டுச் சிறப்பாகப் பராமரித்து வருகிறோம்.
கரோனா காலத்தில் இந்த மூலிகைப் பூங்காவில் வேலை செய்வதால் காவலர்களின் மன அழுத்தம் குறைந்துள்ளது. அலுவலகத்தில் குளிர்சாதன வசதியுள்ள அறைக்குள் அமர்ந்து பணியாற்றுவதைவிட இந்த மூலிகைத் தோட்டத்தில் மரத் தடியில் அமர்ந்து பணியாற்றுவது புத்துணர்ச்சி அளிக்கிறது.
மூலிகைத் தோட்டத்தோடு மலர் பூங்காவும் அமைத்து 8 வடிவ நடைப் பாதையும் அமைத் துள்ளோம். இங்கு காவலர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் மூலிகைகளை இலவசமாக வழங்குகிறோம் என்று கூறினார்.