

கள்ளக்குறிச்சி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரான அ.பிரபு, தியாகதுருகத்தைச் சேர்ந்த சவுந்தர்யா என்பவரை இன்று திருமணம் செய்துகொண்டார்.
கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏவான அ.பிரபு, கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தேர்வு செய்யப்பட்டார். பட்டதாரி இளைஞரான இவர், துடிப்புடன் தொகுதியில் வலம் வந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் எடப்பாடி அணியில் இருந்தவர், கள்ளக்குறிச்சி தனி மாவட்டக் கோரிக்கை நிறைவேற்றவில்லை என்ற காரணத்தை முன்வைத்து, அந்த அணியில் இருந்து விலகி தினகரன் அணியில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனிடையே கடந்த 2019-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து, மீண்டும் எடப்பாடி அணியில் தன்னை இணைத்துக் கொண்டு தொகுதிப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் திருச்செங்கோட்டில் உள்ள கலைக் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் 3-ம் ஆண்டு பயின்றுவரும் தியாகதுருகத்தைச் சேர்ந்த சவுந்தர்யா என்பவரை விரும்பி வந்தார். தற்போது அவரை இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் தியாகதுருகத்தில் உள்ள தனது வீட்டில் திருமணம் செய்துகொண்டுள்ளார்.