தமிழக மக்கள், அதிமுக தொண்டர்களின் நலனைக் கொண்டே எனது முடிவுகள் இருக்கும்: ஓபிஎஸ் 

தமிழக மக்கள், அதிமுக தொண்டர்களின் நலனைக் கொண்டே எனது முடிவுகள் இருக்கும்: ஓபிஎஸ் 
Updated on
2 min read

தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனைக் கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆளும்கட்சியான அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளரை உடனடியாக அறிவித்து தேர்தலைச் சந்திக்கலாம் என்று முதல்வர் பழனிசாமி தரப்பும், தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யலாம் என துணை முதல்வர் ஓபிஎஸ் தரப்பும் வலியுறுத்தி வருகின்றன.

அண்மையில் நடந்த அதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் இந்தப் பிரச்சினை எழுந்தது. இதையடுத்து, கட்சியின் செயற்குழுவைக் கூட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பெரும் எதிர்பார்ப்புகளுடன் கடந்த 28-ம் தேதி அதிமுக செயற்குழு கூடியது. 5 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த செயற்குழு கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் இடையே நேரடியாக காரசார விவாதம் நடந்ததாக கூறப்பட்டது. முடிவில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக்.7-ம் தேதி ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்து அறிவிப்பார்கள் என துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

அதன்பிறகு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து 3 நாட்களாக ஆலோசனை நடத்தினார். அதே நேரத்தில் முதல்வர் பழனிசாமியும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அமைச்சர்களும் முக்கிய நிர்வாகிகளும் இரு தரப்பினரிடமும் பேசி வந்தனர்.

இந்நிலையில், காந்தி பிறந்த நாள், காமராஜர் நினைவுநாள் நிகழ்ச்சிகளில் முதல்வருடன் ஓபிஎஸ் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும் மக்களவை முன்னாள் துணைத் தலைவருமான மு.தம்பிதுரை சந்தித்துப் பேசினார். கட்சியில் நிலவும் பிரச்சினை குறித்து இருவரும் நீண்ட நேரம் ஆலோசித்தனர். அதேநேரத்தில் முதல்வர் பழனிசாமியை அவரது வீட்டில், சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இரு தரப்பிலும் தனித்தனியாக ஆலோசனைகள் தொடர்ந்து நடந்து வருவதால், 7-ம் தேதியாவது பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுமா என்ற கேள்வி அதிமுக தொண்டர்களிடையே எழுந்தது.

இந்நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ், பின்னர் தனது சொந்த ஊரான தேனிக்கு அக்டோபர் 2-ம் தேதி புறப்பட்டுச் சென்றார். இரவு 8 மணிக்கு வடக்கு அக்ரஹாரத்தில் உள்ள அவரது இல்லம் அருகே மாவட்டச் செயலாளர் சையதுகான், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், பெரியகுளம் ஒன்றியச் செயலாளர்கள் செல்லமுத்து, அன்னபிரகாஷ் உள்ளிட்ட பலரும் அவரை வரவேற்றனர்.

அவர்களுடன் துணைமுதல்வர் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். இரவு உணவிற்குப் பிறகு பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டிற்குச் சென்று தங்கினார்.

அக்டோபர் 3-ம் தேதி காலை 11 மணியில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்தனர். தேனி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்டி.கணேசன், சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, விருதுநகர் மாவட்ட அன்னை சத்யா எம்ஜிஆர்.மன்ற மாநில பொதுச் செயலாளர் முனீஸ்வரன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மீனவர் அணி துணைத் தலைவர் எல்பின்ஸ்டன், விருதுநகர் மாவட்ட எம்ஜிஆர்.மன்ற துணைச் செயலாளர் நாகராஜன், அருப்புக்கோட்டை நகர மகளிர் அணி செயலாளர் பிரேமா, திருவண்ணாமலை மகளிர் அணி வடக்கு மாவட்ட செயலாளர் இந்திரா உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் இவரைச் சந்தித்தனர்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை (தெற்கு), உசிலம்பட்டி, சோழவந்தான், மேலூர் தொகுதி எம்எல்ஏக்கள் சரவணன், நீதிபதி, மாணிக்கம், பெரியபுள்ளான் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தை இரவு சந்தித்து பேசினர்.

இந்நிலையில், 2-ம் நாளாக நேற்று காலையும் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இன்று அல்லது நாளை அவர் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. அவர் வருவதற்கு முன்பு, தற்போது தொடரும் சிக்கல்களுக்கு முடிவு எட்டப்படும் என்று அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில், ''தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனைக் கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!

எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!'' என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in