

அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சினையால் அரசு நிர்வாகம் சீர்குலைந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: விவசாய விரோத சட்டங்கள் திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வரும் 12-ம் தேதி மாநில அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.
விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலான பட்டாசு தொழிலைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்து தொடர்ந்து பிரச்சினை உள்ளது. இது உட்கட்சி பிரச்சினைதான். என்றாலும் இவர்கள் பகிரங்கமாக மோதிக்கொள்வதால் நிர்வாகம் சீர் குலைந்து நிற்கிறது. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது, உடலை காவல் துறையினரே எரிப்பது என்பது கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தலைவர்கள் சந்திப்பது என்பது நாகரிகம், கடமை. காவல் துறை நடந்து கொண்ட விதம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாபர் மசூதிஇடிப்பு வழக்கில் தீர்ப்பு ஏற்புடையதல்ல.
சசிகலா சிறையில் இருந்து வந்த பின்னர் அரசியல் மாற்றம் இருக்காது. அவர் ஒரு குற்றவாளி. சொல்லுகிற அளவுக்கு பெரிய செய்தி அல்ல என்றார்.