

குழந்தைகள் நல காவல் துறையினருக்கான பயிற்சி நிகழ்ச்சியில், குழந்தை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசுரத்தை கூடுதல் தலைமை இயக்குநர் சீமா அகர்வால் வெளியிட்டார்.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள குழந்தைகள் நல காவல் துறை பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு, காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், சென்னை காவல் துறை கூடுதல் இயக்குநர் சீமா அகர்வால் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, குழந்தைகள் நல காவல் துறை பணியாளர்களின் கடமை மற்றும் பொறுப்புகள் குறித்து விளக்கி சிறப்புரையாற்றினார். மேலும், குழந்தை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசுரத்தை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில், எஸ்பிக்கள் சண்முகப்பிரியா, கண்ணன், சென்னை மாவட்ட குழந்தை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் ஜெய, காஞ்சிபுரம் சிறார் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், குற்றத் தொடர்பு துறை துணை இயக்குநர் பன்னீர் செல்வம், குழந்தைகள் நலக் குழும நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.