Published : 05 Oct 2020 07:33 AM
Last Updated : 05 Oct 2020 07:33 AM

விதிகளை மீறி வெளியேற்றப்படும் தொழிற்சாலைக் கழிவுகள்; சிட்கோ நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை

திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டையில் விதிகளை மீறி கழிவுநீர் வெளியேற்றப்படுவதால், அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ‘வாய்ஸ் ஆஃப் நேச்சர்' என்ற அமைப்பின் தலைவர் ஆர்.கோகுல்ராஜ், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பகுதியில் இயங்கிவரும் சிட்கோ தொழிற்பேட்டையில் இருந்து சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலைக் கழிவுநீர், அருகில் உள்ள தண்ணீர் குளம் ஏரியில் விடப்படுவதால், ஏரி மாசடைகிறது. அந்த ஏரியில் கழிவுநீர்விடுவதை தடுக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.

இதை விசாரித்த அமர்வு, சிட்கோதொழிற்பேட்டையில் ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டிருந்தது. அவ்வாரியம் தாக்கல் செய்த ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இத்தொழிற்பேட்டையில் 109 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 347 தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. இதில் 307 தொழிற்சாலைகளில் கழிவுநீர் தொட்டி வசதிகள் உள்ளன. 5 தொழிற்சாலைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, கழிவுநீரை சுத்திகரித்து, வளாகத்தில் உள்ள தோட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. மீதம் உள்ள 35 தொழிற்சாலைகள், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரைசிட்கோ கழிவுநீர் குழாய் வழியாகவெளியேற்றி வருகின்றன. அந்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி மழைநீர் கால்வாயில் கலக்கிறது.

ஆனால் சிட்கோ தொழிற்பேட்டையை விட்டு வெளியேறி, நீர்நிலைகளில் கழிவுநீர் கலக்கவில்லை. சிட்கோ வளாகத்தில் கழிவுநீரை தேக்கி, சூரிய வெளிச்சத்தில் ஆவியாக்க குட்டை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது செயல்பாட்டில் இல்லை. இருப்பினும் தொடர்புடைய 35 தொழிற்சாலைகள் மற்றும் சிட்கோ நிர்வாகத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள சிட்கோ நிர்வாகம், நாளொன்றுக்கு 8 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. அது 2022-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, அமர்வின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையை பார்க்கும்போது, தொழிற்சாலைகளில் இருந்து கழிவுகள் வெளியேறுவதை தடுக்க சிட்கோ நிர்வாகம் சரியான நடவடிக்கையை எடுக்கவில்லை என தெரியவருகிறது. எனவே, விதிமீறலில் ஈடுபட்டுள்ள சிட்கோ நிர்வாகம் மற்றும் தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அது தொடர்பான அறிக்கையை அமர்வில் சமர்ப்பிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதற்கான அபராதமும் விதிக்க வேண்டும். சிட்கோ நிர்வாகம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ஏரியுடன் இணைக்கப்பட்ட கால்வாயில் கழிவுநீரை விடவில்லை என கூறியுள்ளது. அதன் உண்மைத் தன்மையையும் ஆராய வேண்டும். மனு மீதான விசாரணை நவம்பர் 20-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x