

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் திறந்து, ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை உடனே அமல்படுத்தவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்துவோம் என்று பாஜக அறிவித்துள்ளது.
புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ இன்று (அக். 4) வெளியிட்ட அறிக்கை:
"ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் ஏழை, எளிய மக்களுக்கு வரப்பிரசாதம் ஆகும். இத்திட்டத்தின்படி, சொந்த மாநிலத்தில் இருந்து இடம்பெயரும் போது தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்படி தங்களுக்குரிய உணவு தானியங்களை தேசிய அளவில் எந்த மாநிலத்திலும் அவரவர் வசிக்கும் இடத்தில் வாங்கிக்கொள்ளலாம். இந்த திட்டம் 1.10.2020 முதல் பல்வேறு மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான தமிழகத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆனால், புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு நியாயவிலைக் கடைகளை மூடி சாதனை புரிந்துள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு வழங்க வேண்டிய இலவச அரிசியை அல்லது அதற்கான பணத்தைக் கொடுக்காமல் பல மாதங்களாக ஏழை, எளிய மக்களை ஏமாற்றி வருகிறது
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் அமல்படுத்தவும் மூடப்பட்டுள்ள நியாயவிலைக் கடைகளை திறந்து வேலை செய்த ஊழியர்களுக்கு சம்பளம் பாக்கி முழுவதும் புதுச்சேரி அரசு கொடுக்க வேண்டும் .
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் திறந்து, ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை உடனே அமல்படுத்தவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்துவோம்"..
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.