தியாகிகள் ஓய்வூதியம் வழங்குவதில் விரைந்து முடிவெடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை: கோப்புப்படம்
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை: கோப்புப்படம்
Updated on
1 min read

சுதந்திர போராட்ட தியாகிகள் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்குவதில் அதிகாரிகள் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி முப்பிடாதி (89). இவருக்கு 26.4.2010 முதல் மத்திய அரசின் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இவர் 20.3.2013-ல் உயிரிழந்தார்.

பின்னர், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் கேட்டு முப்பிடாதியின் மனைவி மீனாட்சி என்ற மீனாட்சியம்மாள் (75), மத்திய அரசுக்கு 2017-ல் மனு கொடுத்தார். இதுவரை அவருக்கு குடும்ப ஓய்வூதியம் தரப்படவில்லை.

இதையடுத்து, மத்திய உள்துறை செயலாளருக்கு 12.9.2020-ல் அனுப்பிய மனுவின் அடிப்படையில் குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிடக்கோரி மீனாட்சி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:

"மனுதாரருக்கு அவர் கணவரின் ஓய்வூதியத்தை தவிர வேறு வாழ்வாதாரம் இல்லை. 7 ஆண்டுகளாக சிரமப்பட்டு வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்த 7 ஆண்டுகளாக கணவரின் குடும்ப ஓய்வூதியத்தை பெறுவதே மனுதாரர் வேலையாக வைத்துள்ளார்.

மனுதாரரின் மனு மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாட்டுக்காக உழைத்தவர்களை கவுரவிக்கும் விதமாக தியாகிகளுக்கும், அவரை சார்ந்தவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த வழக்கில் மனுதாரரின் கணவர் ஓய்வூதியம் பெற்று வருவதால் அதை தவிர குடும்ப ஓய்வூதியம் வழங்குவதற்கு வேறு ஆவணங்கள் தேவையில்லை.

அதிர்ஷ்டவசமாக சுதந்திர போராட்டத்தில் தன் கணவர் ஆற்றிய பணிக்காக வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தை பெற மனுதாரர் உயிருடன் இருக்கிறார். எனவே, மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலித்து மத்திய அரசு 6 வாரத்தில் மனுதாரருக்கு 2013 முதல் தியாகிகள் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்".

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in