

டிக்கெட் விற்பனையில் குறைந்த வருவாய் கொண்ட செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு ‘ஏ கிரேடு’ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில், அதை விட அதிக வருவாய் ஈட்டும் திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு ‘பி கிரேடு’ அந்தஸ்த்து வழங்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமாகி உள்ளது. இதையடுத்து, திருவள்ளூர் ரயில் நிலையத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்
திருவள்ளூர் மாவட்டத்தின் தலைநகராக உள்ள திருவள்ளூரில் இருக்கும் ரயில் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் உள்ளன. இதுகுறித்து அறிய ஏ.தேவராஜன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ரயில்வேக்கு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில், திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு மாதம் எவ்வளவு வருவாய் கிடைக்கிறது, இந்த ரயில் நிலையம் எந்த கிரேடு அந்தஸ்த்தில் உள்ளது என்பன உட்பட பல்வேறு கேள்விகளை அவர் எழுப்பியிருந்தார்.
இதற்கு ரயில்வே மூத்த மண்டல வர்த்தக மேலாளர் பி.ரவிச்சந்தர் அனுப்பியுள்ள பதிலில் குறிப்பிட்டுள்ளதாவது:
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் புறநகர் மற்றும் புறநகர் அல்லாத என்ற இருபிரிவுகளின் கீழ் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கப்படுகிறது. இதன்படி, 2015 மார்ச் மாதம் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் விற்பனை மூலம் ரூ.1.2 கோடியும், ஏப்ரல் மாதம் ரூ.1.03 கோடியும், மே மாதம் ரூ.1.11 கோடியும், ஜூன் மாதம் ரூ.1.08 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் 2015 மார்ச் மாதம் ரூ.94.88 லட்சமும், ஏப்ரல் மாதம் ரூ.97.03 லட்சமும், மே மாதம் ரூ.1.07 கோடியும், ஜூன் மாதம் ரூ.1.03 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு ‘ஏ கிரேடு’ அந்தஸ்த்தும், திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு ‘பி கிரேடு’ அந்தஸ்த்தும் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஏ.தேவராஜன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “நான் கேட்ட கேள்விகளுக்கு, ரயில்வே நிர்வாகம் அளித்துள்ள பதில் மூலம் செங்கல்பட்டு ரயில் நிலையத்தை விட திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு அதிக வருவாய் கிடைப்பது தெரியவந்துள்ளது. எனினும், இந்த ரயில் நிலையத்தை ‘பி கிரேடு’ அந்தஸ்த்தில் வைத்திருப்பது அவர்கள் அளித்த பதில் மூலம் அம்பலமாகியுள்ளது’’ என்றார்.
இதுகுறித்து, மண்டல ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் பாஸ்கரன் கூறியதாவது:
ஏ கிரேடு தேவை
டிக்கெட் விற்பனை மூலம் ஆண்டொன்றுக்கு ரூ.6 கோடி வருவாய் கிடைக்கும் ரயில் நிலையங்களுக்கு ‘ஏ கிரேடு’ அந்தஸ்த்து வழங்க வேண்டும் என்பது ரயில்வேயின் விதியாகும். ரூ.10 கோடி அளவுக்கு வருவாய் கிடைத்தும் இன்னும் திருவள்ளூர் ரயில் நிலையத்தை ‘பி கிரேடு’ அந்தஸ்த்தில் வைத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.
கூடுதல் நிதி கிடைக்கும்
மேலும், ‘ஏ கிரேடு’ அந்தஸ்த்து வழங்கினால் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ரயில்வே நிர்வாகம் ஆண்டு தோறும் ஒதுக்கும் நிதி கூடுதலாக கிடைக்கும். இதன் மூலம், ரயில் நிலையத்தின் தரம் உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.