

வடகிழக்கு பருவ மழை இடர்பாடுகளை எதிர்கொள்ள தீயணைப்பு வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் டிஜிபி சைலேந்திரபாபு 513 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். நேற்று காலை கோவையில் இருந்து சென்னை வரை 513 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணத்தை டிஜிபி தொடங்கினார்.
கோவை, சத்தியமங்கலம், மேச்சேரி, மேட்டூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் வழியாகச் சென்று நாளை மாலை சென்னை பூந்தமல்லியில் சைக்கிள் பயணத்தை நிறைவு செய்கிறார். அவருடன் தீயணைப்பு வீரர்கள் 6 பேரும் சைக்கிள் பயணத்தில் இணைந்து செல்கின்றனர்.
செல்லும் வழியில் உள்ள 20 தீயணைப்பு நிலையங்களை டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்கிறார். நேற்று சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலகம் வந்த டிஜிபி சைலேந்திரபாபு, அங்கு வடகிழக்கு பருவமழை இடர்பாடுகளை எதிர்கொள்ள மீட்பு பணிக்கு தயார் நிலையில் உபகரணங்கள் போதுமானதாக உள்ளதா? என ஆய்வு செய்தார். தொடர்ந்து தீயணைப்பு நிலைய அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
'வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் வீரர்களை உற்சாகப்படுத்தவும், வேகமாக பணிபுரியவும், மீட்புப் பணிகளுக்குத் தேவையான உபகரணங்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்வதும் சைக்கிள் பயணத்தின் நோக்கம். இது, வீரர்கள் தயார் நிலையில் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும்' என சைலேந்திரபாபு தெரிவித்தார்.