

குன்றத்தூர் வட்டத்தில் நடைபெற்றுவரும் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், காஞ்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை ஆட்சியர் பொன்னையா தலைமையில், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், ஆதனூர் அடையாறு கால்வாய் பணிகள், வரதராஜபுரம் மகாலட்சுமி நகர், அஷ்டலட்சுமிநகர், அட்டை தொழிற்சாலை பாலம், சோமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத் தடுப்பு, தடுப்பணை கட்டுதல் மற்றும் கால்வாய் சீரமைப்பு பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வு குறித்து அமைச்சர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.2.5 கோடிசெலவில் காஞ்சி, செங்கை மாவட்டங்களில் உள்ள 18 கால்வாய்கள், அடையாறு மற்றும் வேகவதி ஆறுகளில் தாவரங்கள் மற்றும் குப்பை கழிவுகளை அகற்றி கால்வாயை தூர்வார ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. நிரந்தர வெள்ளத் தடுப்பு மற்றும் நீர் சேகரிப்பு பணிகளையொட்டி ரூ.76.5 கோடி மதிப்பீட்டில் ஒரத்தூர் மற்றும் வரதராஜபுரத்தில் நீர்த்தேக்கங்கள் அமைப்பது, சோமங்கலத்தில் கதவணை மற்றும்பாலம் அமைப்பது ஆகிய பணிகள் நடைபெறுகின்றன.
இப்பணிகள் நிறைவடைந்தால் 1.5 டிஎம்சி மழைநீரை சேகரித்து, குடிநீர் தேவைகளுக்காக பயன்படுத்தலாம். எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில்வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.