Published : 04 Oct 2020 07:20 AM
Last Updated : 04 Oct 2020 07:20 AM

தென்னிந்திய காட்டுப் பகுதிகளில் மறைந்து வாழ்வதற்காக வீரப்பனின் வரலாறு படித்த ஐ.எஸ். தீவிரவாதிகள்: என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தகவல்

காடுகளில் ஆயுதப் பயிற்சி எடுப்பதற்கும், மறைந்து வாழ்வதற்கும் வீரப்பனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் சேகரித்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழகம், டெல்லி, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் கடந்த ஜனவரி மாதம் 20-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகளை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கு விசாரணை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘அல்-ஹிந்த்’ என்ற தீவிரவாத அமைப்பை இந்தியாவின் தென்மாநிலங்களில் உருவாக்க அவர்கள் திட்டமிட்டது தெரியவந்தது. ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக இந்தஅமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய தென்னிந்திய வனப் பகுதிகளில் தங்களுக்கென தனி மாகாணத்தை ஏற்படுத்த ‘அல்-ஹிந்த்’ அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது கடந்த ஜூலை மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு தகவல்களை என்ஐஏ தெரிவித்துள்ளது.

பயங்கரவாத பயிற்சிக்கு எந்த வனப்பகுதியை தேர்வு செய்யலாம், எங்கு பதுங்கி இருக்கலாம் என்பது குறித்து முடிவெடுக்க கடந்த 2019 நவம்பரில் தென்னிந்திய வனப்பகுதிகளில் அவர்கள் சுற்றியுள்ளனர். அப்போது கூடாரங்கள், ரெயின் கோட்கள், ஏணிகள், வில்,அம்புகள், வனப் பகுதியில் நடக்க பயன்படும் காலணிகள்,கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் போன்றவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

நாட்டின் பல்வேறு இடங்களில் இந்து மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் செல்வாக்கு மிகுந்த நபர்களை கொலை செய்துவிட்டு வனப்பகுதிக்குள் தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்காக காட்டுக்குள் பல ஆண்டுகளாக பதுங்கி வாழ்ந்த வீரப்பன் தொடர்புடைய புத்தகங்களை சேகரித்து தீவிரவாதிகள் படித்துள்ளனர். இந்த தகவல்களை குற்றப்பத்திரிகையில் விளக்கி கூறியிருப்பதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x