

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 525 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முட்டைகள் சத்துணவு திட்டத்துக்கு வழங்கப்படுவதுடன் கேரளமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. முட்டைகளுக்கு நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு விலை நிர்ணயம் செய்கிறது.
இதன்படி 505 காசுகளாக இருந்த முட்டை விலை நேற்று 20 காசுகள் உயர்த்தி 525 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017 நவம்பரில் முட்டை விலை 516 காசுகளாக இருந்தது. இதுவே முட்டை வரலாற்றில் உச்சபட்ச விலையாக இருந்தது. இந்த சூழலில் நேற்று 525 காசுகள் என வரலாறு காணாத அளவில் விலை உயர்ந்துள்ளது.
கோழிப் பண்ணையாளர்கள் கூறியபோது, ‘‘கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஊரடங்கால் முட்டைகள் தேங்கியதால் புதிதாக கோழிக் குஞ்சுகளை பண்ணைகளில் விடுவதை நிறுத்தினோம். இதனால் தற்போது உற்பத்தி குறைந்துள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் முட்டை விற்பனை மீண்டும் அதிகரித்து வருகிறது. உற்பத்தி குறைவு, தேவை மிகுதி காரணமாக முட்டை விலை உயர்ந்துள்ளது. ஒரு முட்டை விலை 600 காசுகள் வரை உயர வாய்ப்பு உள்ளது. நாடு முழுவதும் அனைத்து மண்டலங்களிலும் முட்டை விலை ஏற்றம் கண்டு வருகிறது’’ என்று மகிழ்ச்சியுடன் கூறினர்.