Published : 04 Oct 2020 07:10 AM
Last Updated : 04 Oct 2020 07:10 AM

ஐசிஎஃப் பகுதிக்கான பேருந்துகள் வில்லிவாக்கத்தில் இருந்து இயக்கம்: திடீர் மாற்றத்தால் பயணிகள் அதிர்ச்சி

சென்னை ஐசிஎஃப் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட மாநகர பேருந்துகள் வில்லிவாக்கத்தில் இருந்து புறப்படும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐசிஎஃப் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும் ஐசிஎஃப் மருத்துவமனை, 4 பள்ளிகள் இங்கு செயல்பட்டு வருகின்றன. இப்பகுதி மக்கள் மற்றும் ஐசிஎஃப் ஊழியர்களின் தேவையை கருத்தில் கொண்டு இங்கு ஐசிஎஃப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, 50-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இவற்றில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக இந்த பேருந்து நிலையத்துக்கு மாநகர பேருந்துகளின் சேவை படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. 47, 47ஏ எண் பேருந்துகள் மட்டும் ஐசிஎஃப் -ல் இருந்து திருவான்மியூர், அடையார், பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இந்த பேருந்துகளும் நேற்று முன்தினம் இரவு முதல் வில்லிவாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த ஜி.கணேஷ், ஆர்.ஹரிகிருஷ்ணன், என்.சரவணன் ஆகியோர் கூறியதாவது: ஐசிஎஃப் பேருந்து நிலையம் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பகுதியைச் சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து இயக்கப்பட்ட மாநகர பேருந்துகளின் சேவை திடீரென வில்லிவாக்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இது இப்பகுதியில் உள்ள மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாநகர போக்குவரத்து கழகம் இங்குள்ள பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட மாநகர பேருந்துகளின் சேவையை மீண்டும் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஐசிஎஃப் பேருந்து நிலையத்தில் இடநெருக்கடி ஏற்படுவதாக சிலர் புகார் தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில், போலீஸாரின் அறிவுறுத்தலின்படி, இங்கிருந்து செல்ல வேண்டிய மாநகர பேருந்துகளை வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேருந்துகளின் சேவையை நாங்கள் நிறுத்தவும் இல்லை, குறைக்கவும் இல்லை’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x