Published : 04 Oct 2020 06:54 AM
Last Updated : 04 Oct 2020 06:54 AM

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஜூலையில் தமிழகத்தின் சொந்த வரி வருவாய் அதிகரிப்பு; பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து உழைப்போம் என முதல்வர் உறுதி

தமிழகத்தின் சொந்த வரிவருவாய் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஜூலையில் உயர்ந்துள்ளது. இது குறித்த ‘தி இந்து’வின் செய்தியை சுட்டிக்காட்டிய முதல்வர் பழனிசாமி, பொருளாதாரம் வளர்ச்சி யடைய தொடர்ந்து உழைப்போம் என்று தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று காரணமாக தமிழகத்தின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவை சீரமைக்க, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்
ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தனது பரிந்துரையை அரசிடம் அளித்துள்ளது. இதற்கிடையே, மாநிலத்தின்
சொந்த வரி வருவாய் கடந்த ஆண்டை விட தற்போது உயர்ந்தி ருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக, இந்திய தணிக்கை துறை தலைவரின் விவரங்களை சுட்டிக்காட்டி ‘தி இந்து’ நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறிருப்பதாவது:

கடந்த ஜூலை மாதம் தமிழகத்தின் நிதி பற்றாக்குறை கடன்களை தவிர்த்து ரூ.2,605 கோடியே 34 லட்சமாக உள்ளது. இது சாதகமான வளர்ச்சி நிலையை காட்டுகிறது. இதன் அடிப்படையில், வரும் 2021-ம் ஆண்டு ஜூலை வரை மாநில நிதி பற்றாக்குறையானது ரூ.21,833 கோடியே 48 லட்சமாக இருக்கும் என தணிக்கை துறை தலைவர் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் மூலம் தெரியவருகிறது.

மாநில சொந்த வரி வருவாய்,மத்திய வரிகளில் பங்கு உள்ளிட்டவற்றின் மூலம் தமிழகத்தின் மொத்த வருவாய், கடந்த ஆண்டு
ஜூலை வரையிலான ரூ.11,756 கோடியே 98 லட்சத்தைவிட 19.4சதவீதம் அதிகரித்து ரூ.14,041 கோடியே 25 லட்சமாக உயர்ந்
துள்ளது. மாநில வரிவருவாயும் கடந்த ஆண்டு ஜூலையில் ரூ.7,765 கோடியே 15 லட்சமாக இருந்தது. தற்போது 8 சதவீதம் உயர்ந்து ரூ.8,387 கோடியே 23 லட்சமாக உள்ளது.

மாநில சொந்த வரி வருவாயில்

மாநில ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டு ஜூலையில் ரூ.2,360 கோடியே 40 லட்சத்தில் இருந்து இந்த ஆண்டு 27 சதவீதம் உயர்ந்து ரூ.2,997 கோடியே 84 லட்சமாக உள்ளது.

மது விற்பனை வருவாயை உள்ளடக்கிய கலால் வரி வருவாய் கடந்த ஆண்டு ஜூலையில்ரூ.587 கோடியே 65 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு 18.5 சதவீதம் உயர்ந்து ரூ.696 கோடியே57 லட்சமாக உள்ளது. பெட்ரோல்,டீசல், மதுபானங்களுக்கான மதிப்புக் கூட்டுவரி மூலம் கிடைக்கும் விற்பனை வரியும் ரூ.3,820 கோடியே 27 லட்சத்தில் இருந்து ரூ.4,013 கோடியே 21 லட்சமாக உயர்ந்துள்ளது.

அதேநேரம், மாநில வருவாயில் முக்கிய பங்கு வகிக்கும் முத்திரைத்தாள், பதிவுக் கட்டண வருவாய், கடந்த ஆண்டு ரூ.977 கோடியே 53 லட்சம் என இருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.667கோடியே 4 லட்சம் என 31.8 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், மத்திய வரியில் தமிழகத்தின் பங்கு ரூ.1,622 கோடியே 4 லட்சத்தில் இருந்து ரூ.1,757 கோடியே 96லட்சமாக, அதாவது 8.4 சதவீதம்உயர்ந்துள்ளது. மானியங்களை மத்திய அரசு முன்கூட்டியே வழங்கியதே இதற்கு காரணமாகும்.

கடந்த ஆண்டு ஜூலையில் ரூ.967 கோடியே 64 லட்சமாக இருந்த மானியம், இந்த ஆண்டு ரூ.2,989 கோடியே 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் மொத்த செலவு ரூ.16,646 கோடியே 59 லட்சமாகவும், வருவாய் ரூ.14,894 கோடியே 48 லட்சமாகவும் உள்ளது.

அதேபோல், கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிச் திட்டங்களுக்கான மூலதன செலவும் ரூ.1,303 கோடியே 83 லட்சத்தில் இருந்து இந்த ஆண்டு 24.5 சதவீதம் உயர்வு கண்டு ரூ.1,622 கோடியே 91 லட்சமாக உள்ளது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கரோனா பெருந்தொற்று காலத்தில் செலவு அதிகரித்துள்ளதுடன் வருவாயும் குறைந்துள்ளது.

கரோனா தொடர்பான செலவினத்தை உள்ளடக்கி ரூ.12,845 கோடியே 20 லட்சம் மதிப்பிலான முதல் துணை மதிப்பீடுகள் சட்டப்பேரவையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ரூ.9 ஆயிரத்து 27 கோடியே 8 லட்சம் கரோனா தொடர்பான செலவுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இந்த நிதி ஆண்டுக்கான மாநிலத்தின் மொத்த செலவினம் ரூ.3 லட்சத்து 390 கோடி என நிதிநிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் தமிழகம் ரூ.48 ஆயிரம் கோடியை கடனாக பெற்றுள்ளது. அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

இந்தச் செய்தியை மேற்கோள் காட்டி முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘கடந்த ஆண்டு ஜூலை மாத மாநிலத்தின் சொந்த வருவாயை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு ஜூலையில் சாதகமான வளர்ச்சி கண்டறியப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது அரசின் தொடர்முயற்சியால் உருவாகியுள்ளது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு நாங்கள் தொடர்ந்துபாடுபடுவோம்’’ என்று தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x