Published : 04 Oct 2020 06:33 AM
Last Updated : 04 Oct 2020 06:33 AM

வேலைவாய்ப்பு - தனித்து நிற்கும் தமிழக அரசு

வேலைவாய்ப்பு இன்று உலகப் பிரச்சினையாக இருக்கிறது. இதற்கு உள்ளூர் தீர்வு சாத்தியமா..? அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. அதில் ஓரளவு வெற்றியும் பெற்று வருகிறது.

கரோனா வைரஸ் தொற்றால் பல லட்சம் உயிர்கள் பறிபோயின; பல கோடி மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சிதைந்து போனது. உலகப் பொருளாதாரத்தில் செங்குத்தான சரிவு; இதன் காரணமாக, வறுமை, வேலையின்மை அதிகரித்து வருகிறது. இதனைச் சரிசெய்ய சில பத்தாண்டுகள் ஆகலாம்.

இதன் பாதிப்பு பெருமளவில் ஊடுருவா வண்ணம் தடுப்பதில் தமிழக அரசு எடுத்து வரும் சில முயற்சிகள், மிகுந்த மன ஆறுதல் தருவதாக உள்ளன. குறிப்பாக இளைஞர் நலன் சார்ந்த நடவடிக்கைகள், வேறெந்த மாநில அரசும் செய்யத் துணியாத முயற்சிகளைப் பார்க்கையில் நேர்மறைச் சிந்தனையின் வெளிப்பாடாகவே தெரிகின்றன.

ஊரடங்கு காரணமாக, கடந்த சில மாதங்களாய் வணிக நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கிப் போயின. தனியார் நிறுவனங்கள், வேறு வழியின்றி, ஆட்குறைப்பு, ஊதியக் குறைப்புக்குத் தள்ளப்பட்டுள்ளன. எங்கு நோக்கினாலும் விரக்தியும் சோகமும் அப்பி உள்ள சூழ்நிலை; அரசாங்கத்தால் மட்டுமே, நிலைமையை ஓரளவுக்கேனும் சரி செய்ய முடியும். இதனை உணர்ந்து தமிழக அரசு, மிகுந்த நம்பிக்கையுடன் பிரச்சினையை எதிர்கொண்டு, செயல்பட்டு வருகிறது.

‘வெளியிலே’ நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்கிற போது, பணிக்கு ஆட்களைச் சேர்ப்பதில் இறங்கி உள்ளது தமிழக அரசு. சமீபத்தில் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக, காவல் துறை, தீயணைப்புத் துறையில், இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் (Fireman) வேலைக்கு, 10,000க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வந்துள்ளது.

தொய்வடைந்து மனச் சோர்வுடன் உள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்த இதை விடவும் சிறந்த வழி இல்லை. பல லட்சம் பேர் விண்ணப்பித்து, எழுத்துத் தேர்வு, உடற் தகுதித்தேர்வுக்குத் தங்களைத் தயார் செய்து கொள்ள இருக்கிறார்கள். ‘எல்லாம் சரியாகி விடும்’ என்ற நன்னம்பிக்கையை இந்த ஒற்றை அறிவிப்பு ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த சில ஆண்டுகளுக்கு வேலை வாய்ப்புகளே இருக்காது என்கிற அச்சத்தில் இருந்த இளைஞர்கள் மத்தியில் நல்ல மாற்றம் தெரிகிறது. மீண்டும் ‘பழைய’ உற்சாகத்தைப் பார்க்க முடிகிறது.

இந்திய பிபிஓ (BPO) திட்டம், 2 மற்றும் 3-ம் அடுக்கு நகரங்களில், 48,300 இடங்களில் வரவுள்ளது. ஏற்கனவே இதன் தொடக்க நிலையில், சென்னைக்கு 7,705 இடங்கள் கிடைத்தன; அதன் வழியே, 8,387 நேரடி; 16,774 மறைமுக வேலைகள் உருவாயின. தற்போது, இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு 10,000 இடங்கள் ஒதுக்குமாறு, பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை வைத்து இருக்கிறார்.

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பின் கீழ், கடந்த 5 மாதங்களில் 14.46 கோடி நாட்களுக்கான வேலை தரப்பட்டிருக்கிறது. இதில், 7 மாவட்டங்களில், 100%க்கும் மேலாக, (விழுப்புரம் 160% நாகை 150% திருவாரூர் 145%) பணி நடைபெற்று இருக்கிறது. இந்தத் திட்டத்தின் பணியாளர்களில் 85% மகளிர்; 29% எஸ் சி எஸ் டி பிரிவை சேர்ந்தவர்கள். அதாவது, அடித்தட்டு மக்களுக்குப் பயன் சேர்ந்து இருக்கிறது.

சென்னை மாநகராட்சியில், வீடுதோறும் சென்று, உடல் நலனை ஆய்வு செய்யும் பணியில், 11,957 தற்காலிக சுகாதார ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புவித் தகவல் மையம் (geographic info system) மூலம் தமிழ்நாட்டில் 19 தொழிற்பேட்டைகளில் 33,000 ஏக்கர் நிலம், இணையத்தில் பார்வைக்கு வைக்கப்படுகிறது. மேலும் 11,575 ஏக்கர் நிலம் பெறுவதற்கு முயற்சிக்கப்படுகிறது; 8,000 ஏக்கர் பெறப்பட்டு விட்டது. விரைவில் தொடங்கப்பட இருக்கும் இந்தப் பூங்காக்களில், சிறப்புப் பொருளாதார மண்டலம் (SEZ), சாதாரண மண்டலங்கள் என்று இரு வகைகளும் இருக்கும். உலக முதலீட்டாளர், இணையம் முலமாகவே தனக்குப் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

நோய்த் தொற்றுக் காலத்தில் சென்னையில் மட்டும், பல லட்சம் சதுர அடி இடத்தை எடுத்து இருக்கின்றனர். இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. வேளாண் உற்பத்தியில் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது. கரோனா தடுப்புப் பணியிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளது தமிழக அரசு. ‘சுகாதார ஊழியர் பாதுகாப்பு- நோயாளியின் பாதுகாப்புக்கான முன்னுரிமை’ தொடர்பான சர்வதேச விருது, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கிடைத்து இருக்கிறது. 100 பெரிய மருத்துவமனைகள் இடம் பெற்ற, உலகளாவிய போட்டியில், சென்னை அரசு மருத்துவமனை முதல் இடம் பிடித்து உள்ளது.

கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு; இங்கு அப்படி ஒரு பேச்சே இல்லை. மாறாக, பள்ளிகள் செயல்படாத போதும், அரிசி, பருப்பு, உலர் திராட்சை, சத்து மாவு (அங்கன்வாடி மட்டும்) முட்டைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொது விநியோகம், பொதுப் போக்குவரத்து, பொது சுகாதாரம் – எதிலும் பெரிதாக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி, பாடங்கள், நிகழ்ச்சிகளை நல்ல முறையில் கொண்டு சேர்க்கிறது. இத்துடன்,; நீட் தேர்வில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு என்று அடுக்கடுக்காய் ‘ஸ்கோர்’ செய்து ‘சபாஷ்’ பெறுகிறது தமிழக அரசு.

கோரிக்கைகள், குற்றச்சாட்டுகள் என்று தமது ஜனநாயகக் கடமையை சரியாக செய்து வருகின்றன எதிர்க் கட்சிகள். இதற்கு இணையாக, பல நல்ல நகர்வுகள் மூலம், தமிழக மக்களின் குறிப்பாக இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் தமிழக முதல்வர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x