Published : 03 Oct 2020 08:11 PM
Last Updated : 03 Oct 2020 08:11 PM

முதல்வர், துணை முதல்வர் வழிகாட்டுதலோடு தேர்தலை சந்திப்போம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

கோவில்பட்டி

முதல்வர், துணை முதல்வர் வழிகாட்டுதலோடு வரும் சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுக சந்திக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டியளித்தார்.

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பில் யாதவர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட நவநீதகிருஷ்ண பெருமாள் கோயிலில் நேற்று புரட்டாசி 3-வது சனிக்கிழமை சிறப்பு பூஜை நடந்தது.

மாலையில் நடந்த சிறப்பு பூஜையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு தரிசனம் செய்து தேர் பவனியைத் தொடங்கி வைத்தார்.

விழாவில், மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் இன்னும் 10 நாட்களுக்குள் வருகை தர உள்ளார்.

அப்போது தூத்துக்குடி மாவட்டத்துக்‌கு காலத்துக்கும் பேசக்கூடிய, பல தலைமுறைகள் எதிர்பார்த்த மகத்தான பல அறிவிப்புகள் வர உள்ளன.

மேலும், ரூ.4 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம், ரூ.1.50 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையையும் தமிழக முதல்வர் நாளை மறுதினம் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வகுத்துக் கொடுத்த பாதையில் கட்டுக்கோப்புடன் அதிமுக உள்ளது. உலகிலேயே ஒரு அரசியல் கட்சி பிரிந்த பின்னர் ஒன்று கூடி சின்னத்தையும் கொடியையும் மீட்ட வரலாறு அதிமுகவுக்கு மட்டும்தான் உண்டு.

அதனால் அதிமுக பிரிந்து போய்விடும். சிதைந்து போகும். கொடி இருக்காது, சின்னம் முடக்கப்படும் என யாரும் கற்பனையாக நினைத்தால் ஏமாற்றம் தான் வரும்.

ஜனநாயக ரீதியாக இயக்கத்தில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் நடைபெறுவது இயற்கை.

ஆனால் திமுகவைப்போல் பெயரளவுக்கு காணொளி காட்சி மூலமாக செயற்குழு, பொதுக் குழுவைக் கூட்டி அவர்களாக தீர்மானத்தை நிறைவேற்றும் கட்சி அதிமுக அல்ல.

ஜனநாயக ரீதியாக 4 மணி நேரம் விவாதம் நடத்தப்பட்டு சரியான முடிவு எட்டப்பட்டுள்ளது. வரும் 7-ம் தேதி மக்கள் என்ன எதிர்பார்த்தார்களோ, செயற்குழுவில் எதை வலியுறுத்தினார்களோ அந்த முடிவுகள் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. கட்டுக்கோப்பாக ஒரே கொடி, ஒரே சின்னம் என்ற வகையில் அனைத்து தொண்டர்களின் அரவணைப்போடு தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் வழிகாட்டுதலோடு வரும் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்போம். மீண்டும் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமையும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x