

தமிழக முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து தமிழக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழக முதல்வர் பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் முரண்டு பிடித்து வருவதால் அதிமுகவில் குழப்பம் நீடிக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் முதல்வருக்கு ஆதரவாகவும், துணை முதல்வருக்கு ஆதரவாகவும் அதிமுகவினர் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் திருநெல்வேலியில் முதல்வருக்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகள் பல சுவரொட்டிகளை இன்று ஒட்டியது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
2021- ல் தமிழக முதல்வராக எடப்பாடியை தமிழகமே எதிர்பார்க்கிறது என்றும் ,தமிழக முதல்வராக தலைமை ஏற்க வா, எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக அயராது பாடுபடுவோம் என்றெல்லாம் வாசகங்களுடன் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த சுவரொட்டிகளில் துணை முதல்வர் புகைப்படத்துடன், திருநெல்வேலி மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் புகைப்படங்களும் பெரிய அளவில் இடம்பெற்றுள்ளன.